ஒளி இழந்த உள்ளங்கள் ( or ) கும்மிருட்டு குடியிருக்கும் குருவில்லா கல்புகள்



சந்தேகம் இல்லாத விசுவாசம்

உன்னில் வரவில்லையெனில் நீ நாசம்

குருவில் விசுவாசம் கொண்டோருக்கு இறைவாசம்

குருவை மறந்தவர்க்கு உள்ளமே சிறைவாசம்



கப்பல் மூழ்கி கடனாளி ஆகிவிட்டால்

அண்டாவை அடகு வைத்து காப்பாற்ற முடியாது

குருவை துறந்து மதி கெட்டு போய்விட்டால்

உருப்போட்ட பாடத்தினால் கதியடைய முடியாது



சாண் உயர்ந்த பானுவின் கதிரின்

வெப்பக்கொடுமையில் வெந்தே தவிப்பான்

கோனில் உயர்ந்த குருவின் நிழலை

குறைகள் கூறி விட்டே அகன்றோன்



கொட்டும் தேளின் கொடுக்கின் விஷத்தில்

மட்டே இல்லா துன்பம் துய்ப்பான்

வையகம் வாழ வந்தே உதித்த

பொய்யா குருவின் மெய்யை அறியான்



எண்ணங்கள் ஆயிரம் எழுந்தே வந்து

இன்னல் நெருப்பில் எரித்தே கரித்திடும்

சலனங்கள் மனதில் சல்லாபமாடிடும்

சற்குரு தீட்சை தத்துவம் இழந்தாற்கு



குருவில்லா கல்பினிலே கும்மிருட்டும் குடியிருக்கும்

பேதங்கள் தோன்றிவிடும் பேய்கள் நடமாடும்

வேத நிலை மாறிவிடும் ஆதி நிலை அகன்றுவிடும்

உடலென்னும் மண்ணறையும் உருக்குலைந்து போய்விடும்



ஆக்கம் : Adv. A.N.M லியாக்கத் அலி B.sc.,B.L ஹககியுள் காதிரி

மதுக்கூர் .