மறைஞானம் போதிக்கும் மஹான் மனிதக்கடவுளா...?...1


(ஆகஸ்ட் 9ம்தேதி ஷெய்குனா இமாம் அஸ்ஸய்யிது கலீல்அவுன் மௌலானா அவர்கள் 12வது விஜயமாக துபாய் வந்தார்கள். அவர்களின் வருகையையொட்டி தினமும் மஃஹ்ரிப் தொழுகைக்கு பின் அவர்களின் ஞான விளக்கங்கள் சுமார் ஒரு மணிநேரத்திற்கு நடைப்பெற்றது… அதில் 11ம்தேதி அவர்கள் ஆற்றியஉரை இதோ…)

அன்பிற்குரிய முரீதின்களே…!
அனைவருக்கும் எனது நன்றியும் ஸலாமும் உரித்தாகுக…
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்தகு…

இங்கே ஏகத்துவமெய்ஞ்ஞான சபை துபாயில் துவங்கி சுமார் 27 வருடங்களுக்கு மேல் இருக்கும் என நினைக்கிறேன்.
இத்தனை ஆண்டுகள் இதைக்கொண்டு நீங்கள் என்ன அறிந்துக் கொண்டீர்கள்…? என்ன நன்மையை அடைந்தீர்கள் என்பதை ஒருவகையாக நாங்கள் பேச்சுக்கு முன்பு கேட்டுக்கொள்வோமே எனக்கூறி கேள்விக்கு மறுமொழி வினவினார்கள்.

ஒருவர் கூறினார்… சரியான குருவை அடைந்து நேரிய வழியை அடைந்தோம். என்றார்

சரி நேரியவழி என்றால் என்ன ? என்று ஷெய்குனா கேட்டார்கள்.

அல்லாஹ்வை பற்றிய தாத்பரியத்தை அறிந்துக்கொண்டு வருகிறோம் பெருமானார் ரசூல் (ஸல் அலை) அவர்களை பற்றி பூரணமாக கற்றுத்தந்தீர்கள். ஷரிஅத்தை அதன் வேலியுடன் எங்களுக்கு காண்பித்தீர்கள். மேலும் தரீக்கத் ஹக்கீகத் மஃரிபத் பற்றிய உண்மையை அறிகின்றோம். வயதில் மூத்தவர்களை எப்படி மதிக்கவேண்டும் என்பதையும் உணர்த்துனீர்கள் மேலும் நேராகவும் மறைமுகமாகவும் நாங்கள் பல விளக்கங்கள பெற்றுக்கொண்டதும் உண்டு இன்னும் அளித்துக்கொண்டும் இருக்கிறீர்கள். என்றார்.

இன்னொருவர் கூறினார்… பைஅத் பெருவதற்கு முன் அல்லாஹ்வை ஏழு வானத்திற்கு மேல் உள்ளான் என்ற பொதுவான கற்பனையான கருத்தைக் கொண்டிருந்தோம். தங்களிடம் வந்தப்பின் தான் இறை என்பது இப்பிரபஞ்சத்தில் இடைவெளியன்றி எல்லாமாக நெருக்கமாக இணக்கமாகவும் அதுதான் உள்ளது என்ற பேருண்மையை தங்களிடம் கற்றோம். என்றார்.

இன்னுமொருவர் கூறினார்… நான் ஆரம்பத்தில் ஜூம்மா தொழுகைக்கு கூட நேரம் கிடைத்தால் மட்டுமே செல்பவனாக இருந்தேன். தங்களிடம் பைஅத் பெற்றபிறகு ஐவேளை தொழுது வருகிறேன்… ஹஜ் முடித்துள்ளேன் இறைவனை விளங்கி வருகிறேன் நல்ல பணியில் உள்ளேன் முழுமனிதனாக மாறி திருப்தி அடைந்துள்ளேன். என்றார்.

ஓவ்வொருவரும் ஒவ்வொன்றைக் கூறினீர்கள். அதே நேரத்தில் 26 வருடங்களாக (சபைக்கு) வந்தும் ஒரு நன்மையும் அடையவில்லை என ஒருசிலர் சொல்கிறார்கள் அல்லாஹ்தான் அறிவான்.
ஓன்று அவர்களுக்கு அறிவு குறைவாக இருக்க வேண்டும் அல்லது நான் பேசும் பாஷை புரியாமல் இருந்திருக்க வேண்டும்.
அது அவர்களுடைய மூளையின் கெப்பாசிட்டியை பொறுத்தது.
ஒருவேளை இங்கு வந்து தூங்கியிருப்பார்கள். தூங்குபவர்களுக்கும் இடையில் ஓரு ஞானம் வரும்.(அதாவது) ஏதோ சொல்கிறார்களே என்ற எண்ணம் வரும்.

நீங்களெல்லாம் ஒரு ஷெய்கை ரப்பாக(கடவுளாக) நினைக்கிறீர்களா…?
ரப்பு என்றால் வளர்த்து பாதுக்காகின்ற இறைவனுக்கு சொல்வது…
ஒரு ஷெய்கை அல்லாஹ்வாக நினைப்பது(ஷிர்கு) பாவம்… அப்படி நினைக்கக்கூடாது. ஷெய்கிற்கு (இணைவைத்தலை) பாவத்தை தருகிறீர்கள்.

நான் அல்லாஹ் எனச் சொல்கிறேன் என்று சிலர் சொல்கிறார்கள்.
சில ஞானப் பாடல்கள் உள்ளது. அந்தப் பாடல்களை எப்படி பாடியிருக்கிறார்கள்…? ஏன் பாடியிருக்கிறார்கள் என்று ஒரு ஞானியிடம்
கேட்டால் தான் அந்தப்பாட்டை விளங்க முடியும்…!
அரபியில் அரபுஞானிகள் எழுதிய பாடல்கள் நிறைய உள்ளது. தமிழில் மஹானந்த பாவா இன்னும் சிலரின் எண்ணற்ற பாடல்கள் உண்டு. இவர்கள் யாரும் தங்களை அல்லாஹ் எனக் கூறியது இல்லை. அதில் உள்ள வார்த்தைகளை பொதுமக்கள் அதாவது வாசிக்கத் தெரியாதவர்கள் (விளக்கமில்லாதவர்கள்) பார்க்கும்போது வேறு மாதிரியாகத்தான் கருத்து தெரியும்.
ஒரு புலவர் ஒரு பாட்டை எழுதினால் அதை அவர்களுக்கு தெரியமல் கருத்தை கண்டுபிடிக்க முடியாது.
உதாரணத்திற்கு
கொம்புள்ளதற்கு ஐந்து குதிரைக்கு பத்து முளம்
வெம்புகரிக்கு ஆயிரந்தான் வேண்டுமே-அல்லாத
வம்புசரி தீங்கினர்தம் கண்ணுக்கு எட்டாத தூரத்து
நீங்குவதே நல்லநெறி…

(இந்த பாடலுக்கு பொருள்)
கோம்புள்ளதற்கு என்றால் ஆடு மாடுகளுக்கு ஐந்துமுளம் தள்ளியிருக்க வேண்டும்.
குதிரைக்கு பத்துமுளம். அதற்கு கொம்பில்லையென்று அருகே சென்றால் ஓங்கி காலால் உதைத்துவிடும். ஆகையால் குதிரைக்கு பத்துமுளம் தள்ளியிருக்க வேண்டும்.
கரி என்றால் யானை வெம்புக்கரி என்றால் கொடிய யானையெனப் பொருள். அதற்கு ஆயிரம் முளம் தள்ளியிருக்க வேண்டும். பாரதியாரை கொன்றது அதுதானே.
வம்புசரி தீங்கினர்தம்-தீங்கு செய்பவர்கள் கண்ணுக்கு எட்டாத தூரத்திற்கு செல்லவேண்டும். அதுவே நல்ல செயல் என்பது பொருள்.
இப்போது இதன் கருத்து அந்த (புலமை)ஞானம் உடையவர்களுக்கு மட்டுமே விளங்கும்.

ஒருமுறை ஒளவையார் ஒரு அரசவைக்குச் சென்று ‘வரப்புயர’ என்று சொன்னார்களாம். ‘வரப்புயர’ என்றால் ஏதோ வரம்பு உயர்ந்து கொண்டுள்ளது என எண்ணிக் கொண்டிருப்பார்கள். பின்னாலில் வருவது அவர்களுக்கு தெரியாது. அதன் கருத்து அதை விளங்கியவர் மட்டுமே கூறமுடியும். ஓளவையாரிடம் கேட்டதற்கு
வரப்புயர நீருயரும் என்றார்கள் வரப்பு என்றால் வரம்பு. நீரின் வரம்பை உயர்த்தினால் நீரும் உயரும் என்பது கருத்து. ‘நீருயர்ந்தால் நெல்லுயரும்’
நீர் உயர்ந்தால் நெல் பசுமையுடன் வளரும். ‘நெல்லுயர குடியுரும்’ நெல் உயர்ந்தால் நன்றாக சாப்பிட்டு சந்தோசமாக குடி வாழமுடியும்.
‘குடியுயர கோனுயர்வான்’ – கோன் என்றால் அரசன். குடி நன்றாக இருந்தால் அரசன் உயர்வான் என்பது கருத்து. இப்போது இது யாருக்குத் தெரியும்…?
அதை படித்தவர்களிடம்தான் கேட்க வேண்டும்.

நான் ஒரிடத்தில் எழுதி உள்ளேன் ‘மானீக்கி அருவாடு ஆனந்தமே’ என்று. சிலோனில் ஒருவர் இதன் அர்த்தத்தை தேடி எங்கெங்கோ அலைந்திருக்கிறார். கடைசியில் அவருக்கு மானீக்கி அருவாடு என்று பெயரே வைத்துவிட்டார்கள். இறுதியா என்னிடம் வந்தார். இப்போது இதன் கருத்து அந்த ஞானம் உடையவர்களுக்கு மட்டுமே அது தெரியும்.
மான் + நீக்கி + அரு + ஆடு எனப் பிரித்துப் பார்க்க வேண்டும். அதற்கு இலக்கணமும் தெரிய வேண்டும்.
மானீக்கி – மான் என்றால் உடல்
நீக்கி என்றால் நீக்குதல் உடலை நீக்குதல்
அரு என்றால் உடல் இல்லையென்று நீ ஆடு என்பது பொருள்.
உடலை நீக்கி ஒன்றுமில்லை யென்று நீ ஆடு என்பது பொருள்.
இதைத்தான் வெட்டவெளிப் பயிற்சி என்கிறோம். இதை இன்ஸானுல் காமிலும் மற்ற நூல்களிலும் சொல்லப்படுகிறது. நாங்களும் சொல்கிறோம்.
இது காய்ந்த கருவாடுகளுக்கு விளங்காது.

உதாரணத்திற்கு கானகம் வெட்டினான். எனத் தமிழில் உள்ளது. ஒரு கருத்து கால்நகம் வெட்டினான். மற்றொரு கருத்து காட்டை வெட்டினான். கானகம் என்றால் காடு என்பதாகும். இது எந்தச் சொல்லோடு சேர்ந்து வருகிறதோ அப்போது தான் அதன் பொருள் தெரியும். இப்படி அரபியிலும் தமிழிலும் இதுபோன்ற வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. காரணம் அது அந்த புலவர்களின் போக்கு. அது அழகை எடுத்துக்காட்டுவதற்காக இவைபோன்று ஞானக்கவிதைகளில் நிறையவரும்.

(நன்றி- சகோதரர் அமீர்அலி)

தொடரும்