சமய நல்லிணக்க விழா


அனைவருக்கும் இணக்கம்!
என்ன?
வணக்கமா?இணக்கமா?
எழுத்துப் பிழையா?
வார்த்தை தடுமாற்றமா?
இல்லை!...

வணக்கம் சொல்வதில்
சிறிது ஆபத்தும்
கலந்து இருக்கிறது!

காந்திஜியைக் கொன்ற
கோட்சேயின் கையில்
மறைந்திருந்த
துப்பாக்கி போல்!

இன்று
வணக்க மனிதர்களிடம்தாம்
பிணக்கும் மிகைத்திருக்கிறது!
வணக்கம் என
மனதார-வாயாராக் கூறும்
தகுதி வரும்வரை
சிறிது காலத்துக்குச் சொல்வோம்
இணக்கம்!
சொல்லப்போனால்
இணக்கம் தான் வணக்கமே!


இது காந்திக்குப் பிடித்த விழா!
காந்திகிராமத்தில்
அவரின் மடியிலேயே நடக்கும்
பொருத்தமான விழா!
அவர்தான்
சமய நல்லிணக்கத்திற்காக
சாவை சந்தித்த சத்தியமனிதர்!
காந்தி வாழ்கிறார்...இன்னும்...
நம் வடிவங்களில்!அதனால்தான்
அவரது நல்லிணக்க விதைகளை
நாட்டில் நாம் விதைக்கிறோம்!
காந்தி வாழலாம்-ஆனால்
கோட்சேக்கள் வாழ்வதில்
நியாயம் இருக்கிறதா?
இந்திய விடுதலை பெற்று
அறுபதாண்டுகள் கடந்த பின்னும்
வேற்றுமைச் சிந்தனைகளின்
வேர்கள் அழியவில்லையே!
அதனால்தான்
காந்தியை
காந்தி நகரிலிருந்து
காந்திகிராமத்திற்கு
அழைத்திருக்கிறோம்!
கோட்சேக்கள்
தலை எடுக்கும் போதெல்லாம்
காந்தியும் அவதரிப்பார்
அழியாமல்!மறையாமல்!

அன்பர்களே!
நாம் அனைவரும்
இதயங்களால் நடந்து வந்து
இங்கு அமர்ந்திருக்கிறோம்!
கை குலுக்கினால்
பிரிந்து விடுமென்று
மெய்குலுக்கி மனம்
விரிந்து மலர்ந்திருக்கிறோம்!
சமூகத்தில் அவ்வப்போது
பற்றிக்கொள்ளும் நெருப்பு
ஊரையே அழித்துவிடக் கூடாதென்ற
சமூக அக்கறை!

ஒருவருக்கொருவர்
கொடுத்து வாங்குவதற்காக
சம்பந்திகள் போல இங்கு
சங்கமித்திருக்கிறோம்!
சமயங்கள் எனும்
சமையலறையில்
அவரவர் தயாரித்த
அறுசுவை உணவை
பரிமாறிக் கொள்ள
ஆவலோடு கூடியுள்ளோம்!

இஸ்லாமிய பிரியாணி
சனாதனப் பொங்கள்
கிறித்துவ அப்பம்-என
வகை வகையாக
வண்ண வண்ண உணவுகள்!
பசிக்கும் ஒருவன்
இதில் எதைச் சாப்பிட்டாலும்
நிச்சயமாக பசி அடங்கும்!
உணவுதான் வேறுவேறு தவிர
உள்ளடக்கம் ஊட்டச்சத்துதான்!
இறைவனை அடையவேண்டுமென்ற
மனிதனின் பசியை அடக்கவே
மதங்கள்-மார்க்கங்கள் தோன்றின!
அந்தப் பசியே
வெறியாக வெடிக்கும்போது
பத்தும்-அன்பு-பண்பு-நட்பு-பாசம்
என பத்தும் பறந்து போகிறது!
பக்தி கத்தியாகப் பரிணாமம் பெறுகிறது!
சடங்கு எனும் கிடங்கில் விழும்போது
அறிவு முடங்கிப் போகிறது!
அரிசியை உண்ண ஆவல் கொண்டவன்
ஆத்திரத்தில் அவசரம் அவசரமாக
உமியை உண்டு
வயிறு ஊதி அலைகின்றான்!
பயிரை வளர்ப்பதற்காகப் பாத்திகட்டி
களையை வளர்க்கிறான்!
முத்துக்களை எறிந்துவிட்டு
சிப்பிகளைச் சேகரிக்கிறான்!
பூக்களைப் பிய்த்து எறிந்து
நாரை அணிந்து
நாட்டியமாடுகிறான்.!
மதங்களின் உள்ளடக்கமான
தத்துவ மாத்திரைகளை எறிந்து விட்டு
கனமாக-அதன்
அட்டைகளை விழுங்குகிறான்.!
அமைதியான வடிவமான இறைவனிடமிருந்து
அன்பு வடிவமான மனிதப் புனிதர்களின்
வழியாக வந்ததே
மதங்கள்-மார்க்கங்கள்-அறநெறிகள்
ஆண்டவனோ-அவர்களோ
அன்பதைத் தவிர வேறு எதையும்
போதித்ததில்லை.!

ஆனால்
காஷ்மீர்-அமர்நாத்
குஜராத்-அகமதாபாத்
ஒரிஸ்ஸா-பெங்களுர்
குடைப்பாறைப்பட்டி-நத்தம்
எதை உணர்த்துகின்றன?
பகுத்தறிவுப் பகலவன்
பெரியார் உரைத்ததைப்போல்
மதங்கள்-வேதங்கள்-தோற்றுவிட்டனவா?
அவர் அழகாக சொன்னார்!
வேதங்கள் தோற்றுவிட்டன!
அதன் நீதி போதனைகளை-அதை
கெட்டியாகப் பற்றி நிற்போரே
பின்பற்றவில்லையே!-என
சிந்திக்க வேண்டிய செய்தியல்லவா?
வேதங்கள் வாசிப்பதற்கு மட்டுமல்ல
வாழ்ந்து பார்க்கவும்தான்-ஆனால்
வாழ்கிறோமா என்பதே கேள்விக்குறி!
ஏதோ வாழ்வோம் என
ஒரு வழியை தேர்ந்து கொண்ட
ஆன்மீகவாதிகளுக்கு
அதிகப் பொறுப்புகள் உண்டு!
அவர்கள் தேர்ந்து கொண்ட
அறவழித் தொகுப்பின்
சாட்சிகள் அவர்கள்!


ஒரு முஸ்லிம் குர்ஆனின் சாட்சி
ஓர் இந்து கீதையின் சாட்சி
ஒரு கிருத்தவர் பைபிளின் சாட்சி
ஆனால்
சாட்சிகளே பொய் சாட்சியாகலாமா?
குர்ஆன் கூறுகிறது
அனைவரும் ஆதம் பெற்ற மக்கள்!
ஆதமும் ஏவாளும்
இந்த அவைக்கு வருகை தந்தால்
அந்தப் பெற்றோரின் பார்வையில் நாம்
அன்பான பிள்ளைகளாகத்தாமே
தெரிவோம்!
கண்ணன் இங்கு காட்சி தந்தால்
இத்தனை பேரும்
என் உயிர் அல்லவா? என ரசிக்கமாட்டாரா?
இயேசு பெருமான் இங்கு வந்தால்
என் ஒளியிலிருந்து ஏற்றப்பட்ட
எத்தனை மெழுகுவர்த்திகள் என
வியக்கமாட்டாரா?


இந்தப் பார்வை
நம்மிடம் ஏன் இல்லை?
நாம் வேறு வேறாக எண்ணுகிறோம்!
நாம் வேறல்ல
விலக முடியாமல்
பின்னிப் பிணைந்து கிடக்கும்
வேர்கள் நாம்!
உங்கள் நுரையீரல் வரை
சென்று திரும்பிய சுவாசக் காற்றை
நான் சுவாசிக்கிறேன்.!
உங்கள் குருதியை உருவாக்கும்
உணவுப் பொருள்தான்
என் இரத்தத்தையும் உருவாக்குகிறது!
நீங்கள் வாங்கியச் சென்ற
அரிசி மூட்டையில்
பாதியை நான் வாங்குகிறேன்!
நீங்கள் வாங்கிய கடையில்
முதல் வடை நீங்கள் வாங்கினால்
கடைசி வடை எனக்குக் கிடைக்கிறது!
மின்வெட்டில்
இருவரும் இருட்டில் தவிக்கிறோம்!
உங்களைக் கடித்துக்
கொண்டிருக்கும் போதே
என்மீது ஒரு கண் வைத்திருக்கிறது
ஏக்கம் தீராத கொசு!
இந்த அரங்கம் நிரம்ப
அணுக்களின் தொகுப்பாகத்தான்
நாம் அமர்ந்திருக்கிறோம்!
ஒரே பிரபஞ்சம்
ஒரேபூமி-ஒரேசூரியன்-ஒரேசந்திரன்
ஒரேநாடு-ஒரேஊர்
ஒரே நகராட்சிக் குடிநீர்
ஒரே காலை-ஒரே மாலை
அப்படியானால்
வேறுவேறு என்பது வேடிக்கையல்லவா?
சோலை ஒன்று
மலர்கள் பல வண்ணங்களில்
பலவாசத்தில்!
மலர்களின் கூட்டணிதானேசோலை!
மனிதர்களின் கூட்டணிதானே சமூகம்!


அன்பர்களே!
அரசியல்வாதிகளே!
கொள்கையைப் புதைத்து
கூட்டணி சேரும்போது
ஆன்மீகவாதிகளாகிய நாம்
இணக்கம் காண முடியாதா?
அவர்கள் தங்கள்
உயிராக மதிக்கும்
கொள்கைகளையே
ஒத்திவைக்கும்போது
நாம் மயிராக மதிக்கவேண்டிய
தீவிர எண்ணங்களை
தீய்த்துவிட முடியாதா?
விட்டுக் கொடுத்தவர்
கெட்டுப் போனதில்லை!
எட்டி உதைத்தவர்
என்றும் நிலைத்ததில்லை!
நாம்
எட்டி உதைப்பவரின் காலடியிலும்
சகிப்புத்தன்மை-சமரசம் எனும்
சந்தன மலர்களைத் தூவுவோம்!
அது அவர்களின்
சிந்தனை உணர்வுகளைத் தூண்டலாம்!
இதுவே சமயங்களின் முடிவு
வேதங்களின் விடிவு!
காந்தியின் கனவு!
நபிகள் நாயகத்தின் நனவு
அனைவருக்கும் இணக்கம்!
அல்ல...அல்ல...
வணக்கம்.!

---திண்டுக்கல் காந்தி கிராமப் பல்கலைக் கழகத்தில் நடைப்பெற்ற மத நல்லிணக்க விழாவில் எஸ்.உசேன் முஹம்மது ஹக்கியுல்காதியுல் மன்பயீ வாசித்த கவிதை---