கவிதைக் களம்

சுயதரிசனம்

நீச்சல்
ஒரு பயிற்சி
நீந்துவதால்
உடல் வழுவாகும்
ஆனால்
ஞானத்தில் மூழ்கினால்
உள்ளம் தெளிவாகும்

மனிதர்கள்
நீந்தவேண்டும்
தன்னை அறிவதற்கு
அறிவில்
தெளிவதற்கு

பலர்
நீந்துகின்றோம்
கடக்கும்
கப்பலில்
விரையும்
விமானத்தில்
பொருள்தேடி

பொருள்
எண்ணத்தை
கறைபடுத்துகிறது
கறை மனிதர்களை
சிறைப்படுத்துகிறது
நாம்
பொருள் விளங்காமல்
பொருள் தேடுகிறோம்
தேடல் தரிசிப்பதற்கு
நம்மில் நிறைந்த
தூய்மையை
நேசிப்பதற்கு

நாம்
அழுக்கைக் கொண்டு
தூய்மையாக
நினைக்கிறோம்

அழுக்கு
தூய்மையை
தரிசிக்க முடியுமா?
தூய்மையை
நேசிப்பதற்கு
தூய்மை வேண்டும்!

இறைவன்
தூய்மையானவன்!

-கிளியனூர் இஸ்மத் ஹக்கியுல்காதிரி

==================================================================
முழுமை

முழுமை என்றால்
மாபூத கற்பனையா
அல்லது
அணுவுக்கு அணுவான
கடுகளவு சிந்தனையா?

எண்களின்
கணக்குகள் எல்லாம்
முழுமையாய் ஆவதில்லை
முழுமையை கணக்குப் போட
முயன்றாலும்
முடிவதில்லை!

இல்லை என்ற சொல்லும்
முழுமையில் உண்டேயன்றி
முழுமை இல்லை என்று சொல்ல
எங்குமே முடிவதில்லை!

வார்த்தை ஜாலங்களும்
வலுவான பேதங்களும்
எடுக்கும் கோலங்களும்
எட்டாத ஞானங்களும்
முழுமையே அன்றோ!

முழு மதியைக் காண்கிறோம்
முக அழகைக் காண்கிறோம்
காட்சிகளும்
காண்பவைகளும்
முழுமையாய்
முழுமையில் நடப்பதன்றோ!

இழப்பதற்கு ஒன்றுமில்லை
ஆம்
இழப்பு என்பது
வெளியில் இல்லை!

ஓர் புள்ளியும்
முழுமையால்
உள்ளதன்றோ
பஞ்ச பூதமும்
முழுமையில் உள்ளதன்றோ!

நம்மை ஆராய்ந்து
பார்த்து பார்த்து
முழுமையாய் ஆகி நின்று
முழுமையாய் முயற்சி செய்தும்
முடிவாய்
தனித்துக் கூற
முழுமையே
எங்கும்
தனித்து இல்லை

அறியும் விதத்தில்
அறிந்துப் பார்த்தால் அன்றி
அறிந்ததும் முழுமை என்று
அறிய முடியாதன்றோ!

-மன்னார்குடி ஷேக்தாவுது ஹக்கியுல்காதிரி