யாவுமாகலாம்...

தோன்றிவரும் அத்தனைக்கும்
சான்றுபலக் கூறலாம் -
ஊன்றுமிடம் கண்டுகொண்டால்
ஞாலம் சிறிதாகலாம்!
வானத்துக்கும் வையத்துக்கும்
சேர்த்து பறிமாறலாம் -
நீரிழுக்கும் வேருக்குள்ளும்
நீயிருந்து ஆழலாம்!

காணும்பொருள் கண்களுக்கு
எண்ணிக்கையில் கூடலாம் -
எண்ணமது வென்றுவிட்டால்
எண்களற்றுப் போகலாம்!
நாட்டம் நிறைதேட்டங்கொண்டால்
ஈசனிடஞ் சேரலாம் -
ஆடும் மயில் தோகையிலும்
ஏகன்தனைக் காணலாம்!

பொங்கிவரும் தீக்குழம்பின்
அங்கம் உனதாகலாம் -
கொட்டும் மழை நீர்த்துளிக்குள்
நீந்தி விளையாடலாம்!
ஓய்வெடுக்க தென்றலது
உன்னுதவி நாடலாம் -
சுற்றுங்கோள்கள் பற்றிக்கொள்ள
உன்கரத்தைத் தேடலாம்!

பாடம்பல பற்றிக்கொள்ள
பள்ளிக்கூடம் சாரலாம் -
பள்ளிச்சட்டம் அத்தனையும்
அங்கம்தனில் சூடலாம்!
நேரம் நொடி தாண்டிடாமல்
சேர்ந்து துதிப்பாடலாம் -
சட்டம் மட்டும் ஒட்டிக்கொண்டால்
சத்தியமே மாறலாம்!

-அமீர் அலி