இறைவா

இறைவா
என் 'இபாதத்' இலைகள்
சருகாகி வீழ்ந்தாலும்
கிடப்பதென்னவோ உன்
ஏகத்துவ விருட்சத்தின்
காலடியில்தான்

இறைவா
உன்னோடு
அரபு மொழியில் பேசுவதைவிட
அழுகை மொழியில்
பேசும்போதுதான்
உன் அண்மை தெரிகிறது

இறைவா
தொழும்போதுகூட நான்
தூரமாகிறேன்
உன்னை
நினைக்கும்போதெல்லாம்
நெருக்கமாகிறேன்

இறைவா
வானம் வரைகூட
என் எண்ணங்கள்
வியாபிக்க முடிகிறது
இந்த
வார்த்தைத் தடைகள்
என்னை
தரையிலேயே நிறுத்திவிடுகின்றனவே!

இறைவா
உன் அருள் பெட்டகத்துக்கு
பூட்டுக்களே இல்லையெனும்போது
இவர்கள் மட்டும் ஏன்
வெறும் வார்த்தைச் சாவிகளை
பிரார்த்தனை வளையங்களில்
கோர்த்துக்கொண்டு அலைகிறார்கள்?

இறைவா
உண்டுவிட்டு உனக்கு
நன்றி சொல்வதைவிட
பசித்திருந்தும்
உன்னளவில்
பொறுமை கொள்ளும்போதுதான்
என் ஆன்மா
ஆனந்தமடைகிறது

இறைவா
உன்
மகத்துவமிக்க மன்னிப்பால்
மறுபடி மறுபடி
எங்களை
மனிதனாக்குகிறாய்
நாங்களோ
எங்கள் செயல்களால்
மறுபடி மறுபடி
ஷைத்தானாகிறோம்
மறுபடியும் எங்களை
மன்னித்துவிடு நாயனே

இறைவா
தொழுகையில்
உன்னைத் தொலைத்தோம்
வாழ்க்கையில்
எம்மைத் தொலைத்தோம்
'கலிமா'வையும் நாங்கள்
களவு கொடுக்குமுன்
கரையேற்றிவிடு நாயனே

இறைவா
நீ அனுப்பிய
வேத வார்த்தைகளை
உன் தூதர்
வாழ்க்கையாக்கினார்
இவர்களோ
அவைகளை
மறுபடியும்
வார்த்தைகளாக்கிவிட்டார்கள்

இறைவா
நீ
சேதாரமில்லாமல்
பாதுகாக்கும்
திருக்குர்ஆனை
இவர்கள்
ஆதாரத்துக்கு மட்டுமே
அணுகுகிறார்கள்

இறைவா
நீ
உன் தூதரின்
மனதில் இறக்கி வைத்த
திருவசனங்களை
இவர்கள்
மூளைக்குக் கடத்திவிட்டார்கள்
அதனால்
நம்பிக்கை விழுந்தது
சந்தேகம் எழுந்தது

இறைவா
நீ
எழுத்தில் அனுப்பாத
திருமறையை
இவர்கள்
எண்களுக்குள்
சிறைவைத்து விட்டார்கள்

இறைவா
நீ
தர்க்கத்தை
தவிர்க்கச் சொன்னாய்
ஒற்றுமையை
வளர்க்கச் சொன்னாய்
இவர்கள்
தர்க்கித்தே
பிரிந்து போகிறார்கள்

இறைவா
நீ
மறுமை நாளின்
நீதிபதி என்றாய்
இவர்கள்
நீ மறுமைக்கு மட்டுமே
என நினைத்து
இம்மையின் நீதிபதிகளாக
தீர்ப்புகளை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்

இறைவா
கரியை வைரமாக்கும்
காரியக்காரனே!
இங்கே
உன் வஹியைச் சுமந்த
வைரங்களெல்லாம்
பணத்தீயில்
கரியாகிக் கொண்டிருக்கின்றனவே
கொஞ்சம் கவனிப்பாயா?

இறைவா
இந்த
'தவ்ஹீது'க் குயில்களெல்லாம்
ஏகத்துவ கானத்தை
எங்கே தொலைத்தன?

இறைவா
'ஒதுவீராக'
எனப்பணித்தாய்
இவர்கள்
ஒலிப்பேழைகளாக்கி
விற்றுக் கொண்டிருக்கிறார்கள்

இறைவா
அடிக்கடி
சிந்திக்கச் சொன்னாய்
இவர்கள்
குழு அமைத்து
நிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்

இறைவா
இவர்களுக்கு
அச்சமூட்டி எச்சரிக்கை செய்ய
ஏதாவது செய்யேன்

z.ஜபருல்லா