தனக்கு பெயரை தானே அமைத்தான்: மஜ்லிஸ் - 3.

நாள்: சனிக்கிழமை

தேதி: 03/04/2010

இடம்: நிர்வாக தலைவர் A.P. சஹாப்தீன் ஹக்கியுல் காதிரிய்யி, (துபை சபை)

அவர்களின் இல்லம், தேரா, துபை.

நேரம்: மாலை 07:30 (மக்ரிப் தொழுகைக்கு பின்)


பரம் என்றால் பொருள்.?
அது எப்பவுமே இருக்கின்ற பொருள். அது பழையது அல்ல. அது இப்போதுதான் உண்டானது என்று சொல்ல இயலாது. தமிழில் பரம் என்றாலும், அல்லாஹ் என்றாலும் ஒரே கருத்துதான். ஆனால் அறபுச் சொல் அல்லாஹ்விற்கு நிகரான வேறு எந்தச் சொல்லும் எந்த மொழியிலேயும் இல்லை.
God, இறைவன், கடவுள், பரம் என்று பலவகையிலும் எல்லோரும் சொல்கிறார்கள். நாங்கள் அல்லாஹ் என்று மட்டும்தான் சொல்கிறோம். ரஹ்மான், ரஹீம் என்பதெல்லாம் அவனுக்குரிய பெயர்கள்தான். ஆனால் முழுமையான பெயர் என்னவென்று கேட்டால் அல்லாஹ்.
அந்த அல்லாஹ் என்று சொல்லுக்கு நிகரான எந்தவொரு வார்த்தையுமே வேற எந்தவொரு மதத்திலேயுமே வரவில்லை. அல்லாஹ் என்ற ஒவ்வொரு எழுத்தையும் எடுத்து பார்க்கின்ற நேரத்திலேயும், பல எழுத்துக்கள் சேர்ந்த ஒரு சொல் அல்லாஹ் என்பது. அவ்வளவு சீக்கிரமாக, சிறுசாக, அழகாக அல்லாஹ் தனக்கு பெயரை அமைத்து வைத்திருக்கின்றான். பொதுவாக பரம் என்று சொல்வது பரம்பொருள். மிகப் பழமையானவன்.கதீம். அளவில்லாதவன் எப்ப பழசானான் என்று சொல்ல முடியாது. அவ்வளவு பழசு. போக போக போய்க்கொண்டேயிருக்கும் அது.
அது நித்திய பரம். எப்பவுமே அழிவதுமில்லை, கூடுவதுமில்லை, குறைவதுமில்லை, அகலப்படுவதுமில்லை. அதற்கு உயர்வு, தாழ்வு, உயரம், பள்ளம், வலது, இடது எதுவுமே அந்த அல்லாஹ்விற்கு இல்லை. அதைப்பற்றி நாங்கள் விளங்கினால்தான் மனம் போய் சேரும்.
அறிவு அதைப்பற்றி அறிந்திருக்க வேண்டும். அப்போதுதான் அதில் போய் சேரலாம். அல்லாமல் நாங்கள் சும்மா அல்லாஹ், அல்லாஹ் என்று சொல்லிவிட்டு, போய் சேர வேண்டுமென்றால் எப்படி போய் சேர்வது.
மெட்ராஸுக்கு போய் சேர வேண்டுமென்று ராமேஸ்வரத்தில் இருந்து சொல்லிக்கொண்டு இருந்தால் எப்படி போய் சேர்வது?
ராமேஸ்வரத்தில்தான் அவர் இருப்பார். ஏன்? மெட்ராஸுக்கு போகத் தெரியாதே. ஆக மெட்ராஸ் என்றால் என்ன, எப்படி போக வேண்டும் என்று அந்த Mapபை (வரைப்படம்) எடுத்துப் பார்க்க வேண்டும். பிறகு அதற்கு போகிற வழி என்ன?, எந்தமாதிரியெல்லாம் போகலாம் என்பதை அறிய வேண்டும். அறிந்து நாங்கள் போனால்தான் மெட்ராஸுக்கு போய்ச் சேர இயலும். இல்லாவிட்டால் ராமேஸ்வரத்தில்தான் இருப்போம். அதுபோல், அல்லாஹ்வைப்பற்றி அறியக்கூடிய அந்த பாதைகளை, வழிகளை நாங்கள் அறிய வேண்டும். அறிந்து நாங்கள் அதோடு சங்கமமாக வேண்டும். சங்கமம்தான் நெருங்குவது. அல்லாஹ் ஒருவன் என்பதை அறிந்த பிறகுதான் அந்த இடத்திற்கு நாங்கள் போகலாம். அல்லாஹ் ஒருவன். அவன் எப்படி ஒருவன்? அவன் எங்கே இருக்கிறான்? எந்த மாதிரி இருக்கிறான்? எல்லாவற்றையும் நாங்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். விளங்கிய பிறகுதான் எங்களுக்கு அங்கே போக இயலும். அவனைப்பற்றி அறிய வேண்டும். அதற்கு பிறகுதான் சங்கமம்.



அறிவைக் கொண்டு அறிந்தால் சங்கமம்:



"ஸித்ரதுல் முன்தஹா" வரையில்தான் ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்களும், ஜிப்ரீல்(அலை) அவர்களும் போனார்கள். அதுவரை சேர்ந்த பிறகு ஜிப்ரீல்(அலை) அவர்கள் சொல்கிறார்கள், இதற்கு பிறகு என்னால் போக இயலாது, நீங்கள் போய் கொள்ளுங்கள் என்று. அப்போது ரசூலுல்லாஹ்(ஸல்) போனார்கள் அதுதான் சங்கமம். அங்கு போனதுதான் சங்கமம். அதுவரை இருந்ததெல்லாம் அறிவு. அந்த அறிவோடு போய் அந்த இடத்திற்கு போனால் சங்கமம் உண்டாகும். அதற்குண்டான மாதிரி நாங்கள் நடந்துக்கொள்ள வேண்டும். முக்கியமானது அறிவுதான். அறிவைக் கொண்டுதான் அல்லாஹ்வைப்பற்றி அறிய இயலும். எவ்வளவுதான் நீங்கள் அல்லாஹ், அல்லாஹ் என்று உருட்டினாலும் புண்ணியமில்லை. அல்லாஹ் என்ற அறிவை நாங்கள் கற்க வேண்டும். இல்லாவிட்டால் தன்னைப்பற்றி அறிய வேண்டும். "மன் அரப நப்ஸஹு ஃபகத் அரப ரப்பஹு". ரசூல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் எப்படி போய் அல்லாஹ்வை சேர்ந்தார்களோ, இரண்டற கலந்தார்களோ அப்படி போய் ஹக்கைச் சேர வேண்டும். அல்லாஹ்வோடு ரசூல்(ஸல்) பேசினார்கள் என்று சொல்வது இரண்டற கலந்தார்கள் என்ற கருத்து. போகும் வரையில் நாங்கள் அறிவோடு சென்று பின்னால் பரிபூரணமாக ஹக்கோடு கலப்பதுதான் சங்கமம் என்று சொல்வது.



காட்டை விட வீடே சிறந்தது:



துறவறத்தில் சொல்கிறார்கள் இல்லத்துறவு. வீட்டில் இருந்து கொண்டு துறவறம் பூண்டுவது. மற்றது வெளியே போய் காட்டில் துறவறம் பூண்டுவது. காட்டிற்கு போய் தனியாய் இருந்து துறவறம் செய்வதை விட வீட்டிலேயே இருந்து நாங்கள் துறவறம் செய்வது மிக நல்லது. நாங்கள் வீட்டையும், குடும்பத்தையும் கவனித்துக் கொள்கிறோம். குடும்பத்தை கவனித்தல் ஃபர்ளாகிவிட்டது. அதோடு எங்கள் மனத்தை கட்டுப்படுத்தி அதன்படி நாங்கள் நடந்து வருவதுதான் முக்கியமானது. அதுதான் இல்லறம், இல்லத்துறவு. காட்டிற்கு போய் துறவறம் செய்வதனால் எத்தனையோ கஷ்டங்கள் இருக்கு. அதில் திடீரென்று ஒரு நிலையை அடைய முடியாது. காட்டிற்கு போய் பழகும் வரையில் பல வகையான கஷ்டங்களை நாங்கள் அநுபவிக்க வேண்டிய சந்தர்பம் ஏற்படுகிறது. ஆனால் நாங்கள் இங்கேயே இருந்துக் கொண்டு பலவகையான சந்தர்ப்பங்களையும் பெற்றுக் கொள்கிறோம். அவர்கள் காட்டில் போய் இருப்பதை விட இந்த உலகத்திலேயே நாங்கள் நடந்துக் கொள்வது சில முக்கியமான விஷயங்களை அறிந்துக் கொள்கிறோம். ரசூல்(ஸல்) அவர்களுக்கு மக்களோடு பேசிக் கொண்டிருக்கிற நேரத்திலேயே வஹீ வந்துவிடும். அப்போது ரசூல்(ஸல்) அவர்கள் மக்களோடும் பேசிக் கொண்டு, இங்கு வஹீயையும் சொல்வார்கள். இதெல்லாம் இல்லறத் துறவு. வீட்டை, மற்ற எல்லோரையும் விட்டுவிட்டு போவது துறவல்ல. இருந்தே நாங்கள் துறவு செய்வதுதான் நல்லது. அதில்தான் எல்லா வகையான பயிற்சிகளும் எங்களுக்கு உண்டாகிறது. துறவு என்றால் அல்லாஹ் அல்லாததை துறந்துவிடுதல். அல்லாஹ் அல்லாதது இல்லை. எல்லாமே பரிபூரணமாக அதுதான் என்று மற்ற எல்லாவற்றையும் துறந்து விடுவது. மனிதனாக நினைப்பதை, மற்றவகையாக நினைப்பதையெல்லாம் மறந்துவிடுவது. நாங்களே இல்லையென்று நினைப்பது. இதுதான் முக்கியமான துறவு. ரசூல்(ஸல்) அவர்கள் அதைத்தான் செய்தார்கள். ஹீராவில் போய் கொஞ்ச காலம் இருந்தார்கள். அது அவர்களுடைய மனம் rest க்காக இருந்தார்கள். அதற்கு பிறகு அவர்கள் வீட்டிற்கு வந்துவிட்டார்களே. அதற்கு பிறகு வந்ததெல்லாம் வீட்டில் கதைச்சு கொண்டிருக்கும் நேரத்தில்தான் அவர்களுக்கு வஹீ இறக்கப்பட்டது. ஆகவே வீட்டில் இருந்து கொண்டே துறவு செய்வதுதான் மித்த நல்லது. வேறோன்றுமில்லை நான் மட்டும்தான் என்று நினைத்துவிட்டால் அதுவே கல்வத் ஆகிவிட்டது.



ஊழ்வினையை போக்குவோமே ....



ஊழ்வினை என்றால் பழங்காலத்தில் இருந்திருக்கக்கூடிய வினை என்று சொல்வது. பழங்காலச் செயல்கள். அதுதான் எங்களை வந்து இது செய்கிறது என்று ஒரு சிலர் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் ஊழ்வினையை போக்கி அல்லாஹ்வுடைய உறுதுணையை நாடுவது. அவனுடைய உறுதுணையை நாடிவிட்டோம் என்றால் எங்களுக்கு அந்த காலத்தில் இருந்து வரக்கூடிய ஊழ்வினைகள் எங்களுக்கு இருக்காது. எல்லாவற்றிற்குமே அல்லாஹ் போதுமானவன். வேறு எங்களுக்கு எதுவுமே தேவையில்லை. அல்லாஹ்வும், ரசூலும்(ஸல்) போதும் என்பதுதான் அதனுடைய கருத்து.

ஸலவாத்துடன் மஜ்லிஸ் இனிதே நிறைவுற்றது.

நன்றி - அமீர்அலி
ஆதம் அப்துல்குத்தூஸ்