மஜ்லிஸ் - 2.நாள்: வெள்ளிக்கிழமைதேதி: 02/04/2010இடம்: நிர்வாக தலைவர் A.P. சஹாப்தீன் ஹக்கியுல் காதிரிய்யி, (துபை சபை)அவர்களின் இல்லம், தேரா, துபை.நேரம்: மாலை 07:30 (மக்ரிப் தொழுகைக்கு பின்)பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம், என் அன்பிற்குரிய முரீதுகளே, இங்கு வீற்றிருக்கும் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).நேற்று, நாங்கள் தொடக்கமாக ஒரு சில விஷயங்களை பேசி வந்திருந்தோம். இன்று பொதுவாக ஷெய்கு எப்படி இருக்க வேண்டும். அதே நேரத்தில் முரீதீன்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றிய பொதுவான ஒரு இலக்கணம்.

ஷெய்குக்குரிய‌ இலக்கணம்.

ஒரு ஷெய்கு என்பவர் ஞானம் தெரிந்தவராக இருக்க வேண்டும். உலகத்தில் வழி நடத்துவது மட்டுமல்ல ஆகிராவுடைய விஷயங்களை பற்றிய விளக்கங்களையும், அவர்களை எப்படி அங்கு வழி நடத்த வேண்டும் என்பதையும் அறிவதற்க்காகத்தான் இந்த ஞானம் என்ற அறிவு ஒரு ஷெய்குவிற்கு மிகவும் கட்டாயம். ஆகவே, இந்த ஞானம் தெரியும் என்று சொல்லிவிட்டு, பாதியிலேயே அவர் (ஷெய்கு) இருக்கிறார் என்பதை எப்படி அறிந்துக் கொள்வீர்கள்? ஒரு சிலர் அப்படியும் இருக்கிறார்கள்தானே. ஞான விஷயத்தை கேட்டால், அவர் சொல்வது பொருத்தமில்லாத விளக்கங்களாக‌ இருக்கும். ஜாடிக்கு சரியான மூடி என்பார்களே, அந்த மாதிரி தான் கேள்விக்கு மறுமொழி இருக்க வேண்டும். அப்படியில்லாமல் கருத்து விளங்காத விஷய விளக்கமாய் இருக்கும் அது. தெளிவாக சொல்ல முடியாத சில விஷயங்களும் உண்டு. அதை விளங்கக் கூடிய முறையில்தான் அதை விளங்க வேண்டும். இப்படி ஆரம்பத்திலேயே ஒருவரை கண்டு பிடித்துக் கொள்ளலாம்.

ஒருவர் வந்து எங்களிடம் பேசிக் கொண்டிருக்கிறார் என்று சொன்னால், அவர் நிலைமை என்னவென்று அவருடைய பேச்சைக் கொண்டே கண்டு பிடித்து விடலாம். அல்லது அவருடைய முகப் பார்வையை கொண்டும் கண்டு பிடித்துக் கொள்ளலாம். இல்லை, அவர் பேசக் கூடிய வார்த்தைகள் கலங்கமாய் இருக்கும். நல்லதாய் இருக்கும், இந்த வகையில் பேசுகிறவர்களைக் கொண்டு கண்டு பிடித்து கொள்ளலாம். அதாவது, மழுப்பக் கூடிய சில விஷயங்களை சொல்லிக் கொண்டிருப்பார்க‌ள். தெரியாதவர்கள் மழுங்கி போய்விடுவார்கள். ஆனால் தெரிந்தவர்கள் அந்த மழுப்பை மனதுக்கு எடுக்காமல் இந்த பொருள் சரியில்லையென்று இருந்துக் கொள்வார்கள். அது எல்லோருக்கும் பொருந்தும். யாராக இருந்தாலும் எந்த ஷெய்குவாக‌ இருந்தாலும் அந்த ஷெய்கிற்கு அது பொருத்தமானது. என்னையும் கூட்டித்தான் சொல்கிறேன். ஆக, ஷெய்கிற்கு முக்கியமாக தேவைப்படுவது ஞான விளக்கம். அதுதான் மிகவும் அவசியம். பைஅத் என்று சொல்வது அல்லாஹ் வரை போகக் கூடிய விஷயம். அந்த பைஅத் எப்படி இருக்க வேண்டுமென்றால் கொடுப்பவர்கள் சரியாக இருக்க வேண்டும். கண்டவர்கள் எல்லாம் கொடுப்பதனாலேயும், ஞானத்தை இரண்டு புத்தகங்களில் வாசித்து விட்டு பேசுவதனாலேயும் ஞானம் ஆகாது. அதில் விஷய விளக்கம் நுணுக்கமானதாய் இருக்கும். சில விஷயங்களை நுணுக்கமாய் அறிந்துக் கொள்ள வேண்டும். நுண்ணியது, நுண்ணியது என்று சொன்னாலும் அதில் எந்தவொரு கருத்தும் இருக்காது. அந்த நுண்ணியது என்ன என்பதை அறிந்திருக்க வேண்டும்.ஒரு பேச்சில் கூட நுணுக்கம் இருக்கிறது. அதை விளங்கி பேசுபவர்களுக்குத்தான் அது தெரியும். ஞானத்தில் மிகவும் நுண்ணியமான விஷயங்களை விளங்க கூடிய தன்மை மனிதனுக்கு இருக்க வேண்டும். "ஸிராத்துல் முஸ்தகீம்" பாலம் என்று சொல்வது அதுதான். சரியான தவ்ஹீதுடைய நிலை இல்லையென்று சொன்னால் அவர் கீழே விழுந்துவிடுவார். கீழே விழுந்தால் அதுதான் நரகம். அப்படியானவர்கள்தான் ஞானிகள், ஷெய்குமார்கள் என்ற நிலைமையில் இருக்க வேண்டும். இது எல்லோருக்குமே பொருத்தமான ஒரு இலக்கணம். இப்படியான ஷெய்குகளுக்கு முரீதுகள் எப்படி இருக்க வேண்டும்?முரீதுகளின் இலக்கணம்ஷெய்குவிடம் முழுமையாக தன்னை அர்ப்பணித்தவராக இருக்க வேண்டும். உண்மையாகவும் இருக்க வேண்டும். ஷெய்கு சொல்வதை விளங்ககூடியவராக இருக்க வேண்டும். ஒரு ஷெய்குவிற்கு முன்னால் முரீது மய்யித்தை போன்று இருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். எப்படி, எதை சொன்னாலும் சரி என்று போக வேண்டும்.ஆனால் கேட்பதை திரும்ப, திரும்ப மரியாதை இல்லாத முறையில் கேட்பதாக இருந்தால் ஒரு முரீது ஒரு ஷெய்குவிடம் கேட்கக் கூடிய கேள்வி அல்ல. அப்ப அந்த முரீது பொருத்தமானவர் அல்ல. அவர் ஏதோ தன்னுடைய கெட்டித்தனத்தை காட்டுவதற்காக வந்து பேசுகிறார் என்றவொரு நிலை உண்டாகிவிடும். எந்த ஒரு நிலையிலும் மய்யித் போன்று இருக்க வேண்டும். மய்யித்தை கழுவுகிற நேரத்தில் கையை உயர்த்துவது, காலை உயர்த்துவது எல்லாம் கழுகிறவர்களுக்கு உள்ள வேலை. அதற்கு (மய்யித்) ஒன்றும் தெரியாது. எல்லாவற்றையும் இவர் செய்து முடித்து விடுவார். அந்த மாதிரி ஷெய்குவிடம் இருக்கின்றவருக்குத்தான் ஞானம் என்று சொல்கின்ற விளக்கம் உட்புகும்.ஒரு அரசன் ஞானியை காண்பதற்காக போயிருந்திருக்கிறார். அங்கு வாயிலில் ஒரு காவலாள் இருந்துள்ளார். நான் சாமியை பார்க்க போக வேண்டும் என்று சொல்ல, இல்லை இப்ப உங்களுக்கு பார்க்க முடியாது என்று காவலர் சொல்லிவிட்டார். இல்லை நீ போய் சொல் அரசன் "நான்" வந்துள்ளேன் என்று. இல்லை போய் என்னால் சொல்ல இயலாது என காவலர் கூற, இல்லை, நீ போய் சொல் “அரசன் நான் வந்திருக்கிறேன் என்று சொல்” என உத்தரவிடுகிறார். இப்படி இரண்டு மூன்று தடவை சொல்லியாகிவிட்டது காவலர் போய் சொல்லிவிட்டார் ஞானியிடம். அந்த ஞானி மறுமொழி சொல்கிறார் "நான்" செத்த பிறகு அவரை வரச் சொல் என்று. அப்படியென்றால் “நான்” என்ற‌ அகந்தை போன பிறகு வரச் சொல் என்று.தற்பெருமை, அகந்தை இருந்தால் ஒருக்காலமும் அதில் எந்தவொரு புண்ணியமும் இருக்காது. ஆனால், முரீதீன்கள் எல்லாவற்றையும் விளங்கினவர்களாக கேட்டுக் கொள்ள வேண்டும். பலமுறை கேட்கின்ற நேரத்தில் இன்றைக்கு ஒரு விஷயத்தை கேட்கிறார் விளங்கவில்லை. அவர் அடுத்தடுத்த நாள் தொடர்ச்சியாக வருகிறார் என்றால் விஷய விளக்கம் அவருக்கு சும்மாவே வந்துவிடும். ஒரு நூலை படிக்கின்றீர்கள் இன்றைக்கு விளங்கவில்லை, நாளைக்கு படிக்கின்றீர்கள் விளங்கவில்லை. அடுத்த நாள் எடுக்கின்றீர்கள் விளங்கவில்லை. அடுத்த நாள் எடுக்கின்றீர்கள். திடீரென்று யாரோ சொல்லி தந்தது போல ஞாபகம் வரும். இதுதான், ஞானத்துடைய முழுமையான கருத்து விரும்பி படிக்க வேண்டும். குர்ஆனைக் கூட சும்மா பொதுவாக‌ எல்லோரும் ஓதிக் கொண்டிருப்பார்கள். ஆனால் விஷய விளக்கமுள்ளவர்கள் குர்ஆனை ஓதினால் பல்லாயிரக்கண‌க்கான கருத்தை அதற்கு எடுத்துக் காட்டுவார்கள். குதுபு நாயகம் அவர்கள் குர்ஆனுக்கு எத்தனையோ பொருளை சொல்வார்களாம். முரீதீன்கள் அந்த மாதிரியான முழுமையான விளக்கம் பெற்று இருக்க வேண்டும். ஷெய்குவிடம் முழுமையான நம்பிக்கையும் இருக்க வேண்டும். ஷெய்கைப் பற்றி சந்தேகத்தை வைத்துக் கொண்டு இருந்தார்கள் என்றால் அல்லது ஒரு சபை இல்லாமல் ஆக்குவதற்கு எண்ணம் வைத்திருந்தார்கள் என்றால் அது நடக்காது, அவரவர்களே சபையிலிருந்து போய்விடுவார்கள். முனாஃபிக்தனமாக ஒரு சிலர் நடக்கிறார்கள். முனாஃபிக் என்று சொல்லிவிட்டால் ஒரு பாரமான வார்த்தை மாதிரி கருதுகிறார்கள். ஒரு பாரமான வார்த்தைதான் அந்த நேரத்தில். எப்படியென்றால், முன்னால் ஒன்று பேசிவிட்டு, பின்னால் ஒன்றை பேசுகிறார். நிஃபாக், முனாஃபிக் தனம் அது ஒன்றுக்கொன்று மாற்றமாக இருக்கும். சரியாக இருக்காது. அது மற்றவர்களிடம் பகையை உண்டாக்கும். ஒரு ஷெய்குவிடம் வரக்கூடிய முரீது தனக்கு ஒன்றுமே தெரியாது என்றுதான் வர வேண்டும். நிறைகுடமாக இல்லாமல் குறை குடமாக இருக்க வேண்டும். அப்போதுதான், அதில் ஏதேனும் ஊற்ற இயலும். ஷெய்கு இருக்கிறார்கள், ஷெய்குக்குரிய மரியாதையை நாங்கள் கொடுக்க வேண்டும் என்ற அளவில் இருந்தால்தான் அவருக்கு எவ்வளவோ நன்மைகள் வந்து சேர்ந்து கொண்டேயிருக்கும். அப்படியில்லாமல் எனக்கு தெரியும், ஏற்கனவே நான் படித்துவிட்டுத்தான் வந்தேன் என்று சொன்னால் அவருக்கு இங்கு இடமில்லை.ரசூல் (ஸல்) இடத்தில் எத்தனையோ சஹாபாக்கள் இருந்தார்கள். அபூபக்கர் சித்தீக் (ரலி), உமர் (ரலி), உதுமான் (ரலி), அலி (ரலி) இருந்தார்கள். இவர்கள், நான்கு பேருக்குள்ளேயே எவ்வளவோ வித்தியாசம் இருக்கின்றது. ரசூல் (ஸல்) அவர்கள், அலி (ரலி)அவர்களோடு மித்தம் ரகசியமாக சில விஷயங்கள் பேசிக் கொண்டிருந்தார்களாம். அப்போது அந்த இடத்திற்கு அபூபக்கர் (ரலி) வந்தார்களாம். அவர்கள் வந்தவுடன் மாமாவும், மருமகனும் பேச்சை நிறுத்திவிட்டார்களாம். அபூபக்கர் (ரலி) அவர்களுக்கோ பெரிய கவலை. ஏனென்றால் எந்தவொரு விஷயமும் தெரியாமல் இல்லை. எந்த ஆபத்து நேரத்திலும் கூட இருந்தவர்கள். ரசூல் (ஸல்) எது சொன்னாலும் சரியென்று போகிறவர்கள். இப்படியான நேரத்தில், ஏன் ரசூலுல்லாஹ் (ஸல்) என்னிடம் மறைத்தீர்கள்? என்று கேட்க‌, இல்லை அபூபக்கரே (ரலி) அது உங்களுக்கு சரிவராது என்று ரசூல் (ஸல்) அவர்கள் கூற, இல்லை, எனக்கு நீங்கள் சொல்ல வேண்டும் எனக் கேட்டார்களாம் அபூபக்கர் சித்திக் (ரலி) அவர்கள்.ரசூல் (ஸல்) அவர்கள் சும்மா லேசான ஒரு விஷயத்தை எடுத்து போட்டார்கள். உடனே அபூபக்கர் (ரலி) அவர்கள் திண்டாடிவிட்டார்கள். அப்போது ரசூல் (ஸல்) சொன்னார்களாம், அபூபக்கரே நீங்கள் மூஸவிய்யத்து இவர்கள் (அலி ரலியல்லாஹ்) ஈஸவிய்யத்து. ஞான விஷயத்தில் இந்த இரண்டு பேருக்கும் இடையிலுள்ள வித்தியாசத்தை பாருங்கள். அல்லாஹ்வைப் பற்றி கொடுக்கக் கூடிய அறிவில் அவர்களுக்கு அவ்வளவு தூரத்திற்கு தூக்க முடியாத நிலைமை ஏற்பட்டது. ஆனால் ரசூல் (ஸல்) அவர்களுடைய உயிர் அவர்கள்தான் (அபூபக்கர் ரலியல்லாஹ்).உமர் (ரலி) இருந்தார்கள். அவர்கள் கொஞ்சம் கடுமையாகவும் இருந்தார்கள். நல்லவர்களாக‌வும் பெரும் கெட்டிக்காரராகவும் இருந்தார்கள். ஆனால் சில விஷயங்கள் அவர்கள் சொன்னதற்கு நேர்பாடா குர்ஆனில் வஹீயும் வந்துள்ளது ரசூலுல்லாஹ் (ஸல்) விற்கு. ஒரு தடவை ரசூல் (ஸல்) சொல்லியிருக்கிறார்கள் நான் இல்லாவிட்டால் உமர் கூட நபியாக வந்திருக்கலாம் என்று. அதுமாதிரியான நிலைமை அவர்களிடம் இருந்திருக்கின்றது.முரீதுகளில் பல நிலைமை இருந்திருக்கின்றது. இருந்தவர்களில் யாரும் ரசூல் (ஸல்) அவர்களுக்கு விரோதியாக இருக்கவில்லை. ஒரு சிலரை தவிர. அபுஜஹல், அபுலஹப் அவர்களெல்லாம் கடுமையாகவே ரசூல் (ஸல்) அவர்களை எதிர்த்தவர்கள் அவர்கள் ஒரு பகுதி. கொஞ்சம் பேர் முனாஃபிக் என்று தள்ளியே விட்டுவிட்டார்கள் ரசூல் (ஸல்) அவர்கள். முன்னாலும் பேசுவது பின்னாலும் பேசுவது அந்தமாதிரி இருந்தார்கள். ஒரு தடவை ரசூல் (ஸல்) அவர்கள் யுத்ததிற்கு போகிறார்கள். யுத்தத்தை இங்கு நடத்துவதா? அல்லது மதினாவிற்கு வெளியே போய் நடத்துவதா? என்று ரசூல் (ஸல்) கேட்கிறார்கள். அவர்கள் சொன்னார்கள் ரசூலுல்லாஹ் (ஸல்) நாங்கள் வெளியே போய் யுத்தம் செய்தால்தான் நல்லது. மதீனாவின் உள்ளேயே இருந்து யுத்தம் செய்வது நன்றாக இல்லை. மற்றவர்கள் சொன்னார்கள் இல்லை ரசூலுல்லாஹ் (ஸல்) இங்கேயே யுத்தம் செய்வோம் என்று. விஷயம் என்னவென்றால் ஒன்று ரசூல்(ஸல்) அவர்கள் உள்ளுக்குள்ளேயே யுத்தம் செய்தார்கள் என்றால் பெண்கள் இருக்கிறார்கள். அடுத்தது, யுத்தம் நடக்கின்ற இடம் மித்தம் மோசமாக போய்விடும். ஆகையால் நாம் வெளியே போய் யுத்தம் செய்வோம் என்று சொன்னார்கள். அவர்கள் சொன்னதை ரசூல்(ஸல்) அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள்.ஏற்றுக் கொண்டு யுத்தம் நடக்கின்ற நேரத்தில், கொஞ்சம் பேர் சுமார் 10, 15 நபர்கள் நாங்கள் இங்கே யுத்தம் செய்யவில்லை எங்களால் முடியாது என்று சொல்லி வெளியே போய்விட்டார்கள். ரசூல்(ஸல்) அவர்கள் இருந்தவர்களோடு போய் யுத்தம் செய்து அவர்கள் வெற்றியை எடுத்துக் கொன்டு வந்துவிட்டார்கள். அவர்களைத்தான் முனாஃபிக் என்று சொல்வது. ஏனென்றால் முன்னால் யுத்தம் செய்வோம் என இருந்துவிட்டு பின்னால் ரசூல்(ஸல்) அவர்களை விட்டு வெளியே போய்விடுகிறார்கள். இப்படி ஒரு சரித்திரம் உள்ளது.சஹாபாக்களுக்குள்ளேயே இப்படியிருந்தால், முரீதுக்களுக்குள்ளும் இப்படி இருக்கத்தான் வேண்டும் இல்லையா? ஆனால் எல்லா முரீதுகளும் அப்படி இருக்கமாட்டார்கள். நான் நினைக்கின்றேன் எங்க முரீதுகள் நன்றாகத்தான் இருப்பார்கள். ஷெய்கைப் பற்றி சின்ன ஒரு சந்தேகமோ அல்லது இவர்கள் ஒருவகையாக பேசுகிறார்களே, அவரைப் பற்றி பேசுவதற்கு இவர்கள் யார்? இவர்கள் ஏன் இதைப் பற்றி பேச வேண்டும்? என்று கேள்வி வந்துவிட்டாலும், மனதுக்குள்ள ஊசலாட்டம் வந்துவிட்டாலும், அவருடைய பைஅத் முறிந்து விடும். அதை நாங்களாக நீக்க தேவையில்லை அவர்களே நீங்கி விடுகிறார்கள். உதாரணமாக ஒரு விஷயத்தை பேசிக்கொண்டிருக்கிறோம், அந்நேரத்தில் இன்னொருவர் வருகிறார். "இப்படி வாப்பா பேசினார்கள்” என்று ஒருவர் கூற, அவர்கள் ஏன் அதையெல்லாம் பேச வேண்டும், அவர்களுக்கு அதை பேசத் தேவையில்லையே என்று அந்த வார்த்தையை சொல்லி விட்டால், அப்பொழுது ஷெய்குக்கு மேலாக அவர் பேசுவதை மாதிரி ஆகுவதனால் அவருடைய பைஅத் முறிந்துவிடும். சந்தேகங் கொண்டாலும் சரி. இப்படி எழுதியிருக்கிறார்கள் இது சரியா? என்று பெரிய மனிதனாக என்னை சந்தேகிக்கின்றது. சந்தேகிக்கின்றது அல்லாமல் அதற்கு மேலாக பேசுவது. ஒரு ஷெய்குவிற்கு மேலாக பேசுவது ஒரு முரீதிற்கு தகுதியே இல்லை. அப்படி இருந்ததென்றுச் சொன்னால் அவருடைய முரீது/பைஅத் எடுபட்டே போய்விடும். ஷெய்குவின் மேல் கொஞ்சம் கோபமாக நடந்துக் கொள்கிறார் என்றால் அப்பவும் பைஅத் போய்விடும். திரும்ப முரீது என்று சொல்லி வருவதில் கருத்து இல்லை, வா இருக்கட்டும் என்று போவதுதான். இப்படி செய்கிறார்களே சரியா? என்று ஆராய்ச்சி செய்ய போனால் போச்சு. இப்ப இஸ்லாத்தில் ஆராய்ச்சி செய்கிறார்களே, சஹீயான ஹதீஸ் இருக்கின்ற நேரத்தில் சொன்னவர் சரியில்லை எடுத்தவர் சரியில்லை என்று சொன்னால், அப்படி பேச வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் ஹதீஸ் சஹீதான். கிதாபே அப்படி போடப்பட்டுள்ளது. அந்தமாதிரி சந்தேகப்படுவதாக இருந்தால் அந்த இமாமில் இவருக்கு எந்தவொரு தொடர்பும் இல்லாமல் போய்விடும். ஷரியத்தில் எந்த தொடர்பும் இல்லாமல் போய்விடும். ஷரியத் அவருக்கு பொருத்தமற்றது.ஒரு ஷெய்கு ஞான விளக்கங்கள் அறிந்தவராய் இருந்தால்தான் முரீதின்களை நேர்வழி காட்ட முடியும். ஏனென்றால் என்னிலிருந்து இன்னவர், என்னிலிருந்து இன்னவர் என்று இப்படி போய் அங்கே போவோம் நாங்கள். அங்கு போகும் வரையில் அந்த தொடர்பு இருக்கும். ஆனால் இடையில் முறிந்து விட்டது என்றால், சூரியனை விட்டு பூமி பிரிந்தது போலத்தான் ஆகும். சூரிய குடும்பம் உள்ளது. பூமி, சந்திரன் மற்ற கோள்களில் இருக்கக்கூடிய எல்லா நட்சத்திரங்களும் சூரியனுடைய ஆர்டர்ஷிப்பில்தான் (ordership) அது இருந்து கொண்டிருக்கிறது. அது ஒவ்வொன்றும் பூமியை ஒவ்வொரு வகையில் சுத்திக் கொண்டிருக்கிறது. காரணம் ஒரு பிடிப்பு இருப்பதனால்தான் இது அப்படியே சுத்துகிறது. திடீரென்று இந்த சக்தி எந்த வகையிலோ எடுப்பட்டு போய்விட்டது என்றால் இந்த பூமி வீசப்பட்டு போய் விடும். எரி நட்சத்திரங்கள் (shooting stars) எங்கெங்கெல்லாம் போகிறது, அது மாதிரி வீசப்பட்டு விடும். பூமியும் ஒரு நட்சத்திரம்தான் அந்த பூமியினுடைய ஹாலே (நிலையே) போய்விடும், அதுபோலத்தான் முரீதுகளுடைய நிலையும். ஒரு ஷெய்குவினுடைய தொடர்பில் இருந்து திடீரென்று விடுப்பட்டு போவதென்றால், அவனுடைய நிலைமை அவ்வளவுதான். ஒரு முரீது ஒரு ஷெய்குவினிடத்தில் எப்படி நடக்க வேண்டும் என்பதற்கு உதாரணம். அந்த அளவோட நடந்துக் கொள்ள வேண்டும். தனக்கு தெரியாத விஷயங்களை பேச போகக் கூடாது. தவ்ஹீதுடைய இல்மு மிக நுணுக்கமானது. அல்லாஹ் இருக்கிறான் அல்லாஹ் பார்த்துக் கொள்வான் என்று எல்லோரும் சொல்வதுதானே. அல்லாஹ் இருக்கின்றான் என சொல்லும் நேரத்தில் எங்களுடைய நிலைமை உண்மையானதாக இருக்க வேண்டும். ஒரு உண்மையான நிலைமை கருதி அல்லாஹ் என்றால் என்ன? இருக்கின்றான் என்றால் என்ன? என்பதை தெரிந்து சொன்னால் பரவாயில்லை. இருக்கின்றான் என்றால் அல்லாஹ் எங்கே இருக்கின்றான்? அடுத்த கேள்வி. அல்லாஹ் இருக்கின்றான், அவன் ஆணா? பெண்ணா? இருக்கின்றான் என்றால் ஆண். இருக்கின்றாள் என்றால் பெண். எப்படி நாங்கள் சொல்வது? அல்லாஹ் இருக்கின்றான். எதில் இருக்கின்றான்? நாற்காலியில் இருக்கின்றானா? அப்படித்தானே சொல்கிறார்கள்.ஆக இந்த வகையில் பார்க்கும் நேரத்தில், அல்லாஹ் இருக்கின்றான் என்று சொல்வதிலும், அல்லாஹ் எங்கும் இருக்கின்றான் என்று சொல்வதிலும், எல்லாவற்றிலுமே கருத்து இருக்கிறது. அல்லாஹ் எங்கும் இருக்கின்றான் என்பதில் எப்படி? கொஞ்சம் கொஞ்சமாக இருக்கின்றானா? கொஞ்சம் பேர் அப்படித்தான் யோசிப்பார்கள். அவனுக்கு எல்லா வல்லமையும் இருக்கின்றதால் அவன் கொஞ்சம் கொஞ்சமாக எல்லா இடத்திலேயும் இருப்பான் போல் தெரிகிறது என்று. அதனால் எல்லாமே அவனுக்கு தெரியும். ஆக எப்படி இருக்ககின்றான்? எல்லாவற்றிலுமே சேர்ந்து முழுமையாக இருக்கின்றான் என்ற எண்ணம் இருக்க வேண்டும். இருக்கின்றான் என்றால் அவன் ஆணும் இல்லை பெண்ணும் இல்லை. ஆண் என்று சொல்வது ஒரு பேச்சுக்காகத்தான். இருக்கின்றான் என்று ஆண் விகுதியை வைத்து பேசுகின்றோம். இருக்கிறாள் என்று சொல்ல முடியாது அதற்காக அல்லாஹ் இருக்கின்றான் என்று சொல்கின்றோம் அந்த கருத்தோடு. ஆனால் அவன் ஆணுமல்ல பெண்ணுமல்ல. சிலர் சொல்வார்கள் எல்லாம் அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்று. எப்படி பார்த்துக் கொண்டிருக்கிறான்? அவனுக்கு கண்ணிருக்கிறதா? எங்கே இருக்கிறது கண்? ஒரே நேரத்தில் இங்கே அங்கேயெல்லாம் எப்படி பார்க்கிறது? எப்படியென்ற கேள்வி இருக்கத்தானே செய்யும். அவனுக்கு கண்ணாக நாங்கள் இருக்கிறதாக அவனே சொல்கிறானே. பொதுவாக, மஹ்லூதுகத்துகளுடைய கண்ணே அவனுடைய கண்தான். அவன் இல்லாவிட்டால் நாங்கள் பார்க்க முடியுமா? அவன் அந்த சத்தியை (Power) எங்களுக்கு தந்திருக்கிறான். அவன் அதனால் பார்த்துக் கொண்டிருக்கிறான்.எல்லா அறிவையும் ம‌னித‌னுக்கு கொடுத்திருக்கிறான். எல்லா பொருள்க‌ளிலும் அந்தந்த‌ அறிவு இருக்கிற‌து. அந்த‌ அறிவை தந்து அவ‌ன் பார்த்துக் கொண்டிருக்கிறான், அறிந்து கொண்டிருக்கிறான். அவ‌ன் இல்லாவிட்டால் எங்க‌ளுக்கு அறிவே இருக்காது. அவ‌ன் கொஞ்ச‌ம் த‌ள்ளிவிட்டுவிட்டான் என்றால் அந்த‌ அறிவு எங்க‌ளுக்கு இருக்காது. க‌ஸ்ஸாலி இமாம் (ர‌ஹ்) அதிக‌மாக‌ வெளியே போக‌மாட்டார்க‌ள். ஞான‌த்தை அறிந்த‌ பிற‌கு அவ‌ர்க‌ள் அதிக‌மாக‌ ஞான‌ ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌ விஷ‌ய‌ங்க‌ளின்தான் கால‌த்தை அதிக‌மாக‌ போக்கினார்க‌ள். அவ‌ர்க‌ளிட‌ம் ஓதிய‌ ஒரு ஆள் ஏதோ ஒரு ச‌பையை ந‌ட‌த்திக் கொண்டிருக்கிறார். அவ‌ர் சொல்லி இருக்கிறார், க‌ஸ்ஸாலி கூட‌ என்னிட‌ம்தான் ப‌டித்தார் என்று. பாருங்க‌ள், ம‌னித‌னில் எத்த‌னையோ வகையான ம‌னித‌ இன‌ம் இருக்கு.க‌ஸ்ஸாலி இமாம் (ர‌ஹ்) அவ‌ர்க‌ளிட‌ம் அவ‌ன் ப‌டித்துவிட்டு, ம‌னித‌னாகி வ‌ந்த‌திற்கு பின்பு அவ‌ன் சொல்கிறான் அவ‌னிட‌ம்தான் க‌ஸ்ஸாலி இமாம் (ர‌ஹ்) ப‌டித்தார்க‌ள் என்று. க‌ஸ்ஸாலி இமாம் (ர‌ஹ்) அவ‌ர்க‌ளிட‌ம் ஒருவ‌ர் வ‌ந்து சொல்லிவிட்டார் இமாம் அவ‌ர்க‌ளே, நீங்க‌ள் ப‌டித்த‌து அவ‌னிட‌ம்தானாம் என்று. இது இர‌ண்டாவ‌து த‌ட‌வை இமாமிட‌ம் செய்தி வ‌ந்த‌போது, அவ‌ர்க‌ள் சொன்னார்க‌ளாம் அவ‌ன் என்னிட‌ம் ப‌டித்த‌தை ம‌ற‌ந்துவிடுவான் என்று. அவ‌ன் ம‌ற‌ந்தான் எப்ப‌டி? அவருக்கு பைத்திய‌ம் பிடித்துவிட்ட‌து. அத‌ற்கு பிற‌கு ஏதேனும் ஞாப‌க‌ ச‌க்தி இருக்குமா?ப‌டித்த‌ மாண‌வ‌ர்க‌ள் ஆசிரிய‌ர்க‌ளை இழிவுப்ப‌டுத்துவ‌து பெரிய‌ பாவ‌மான‌ விஷ‌ய‌ம். நாங்க‌ள் எப்ப‌வும் எங்க‌ளுடைய‌ ஆசிரிய‌ரை க‌ண்டால், சைக்கிளில் போகும் நேர‌த்தில் உட‌னே இற‌ங்கிவிடுவோம். அந்த‌ நேர‌த்தில் இற‌ங்கி பேசிவிட்டு ம‌ரியாதை செய்துவிட்டுத்தான் போவோம். அது ஹிந்து ஆசிரியராகவோ, முஸ்லிம் ஆசிரிய‌ராக‌வோ இருந்தாலும் ச‌ரி எல்லோருக்கும் ஒரே ம‌ரியாதைத்தான். ஏனென்றால் எங்க‌ளுக்கு ப‌டித்துக் கொடுத்த‌வ‌ர்க‌ள். ஒரு சின்ன‌ டிராயிங் பாட‌த்துக்கு வ‌ந்து இப்ப‌டி கீறுங்க‌ள் என்று சொல்ப‌வ‌ருக்கும் நாங்க‌ள் ம‌ரியாதை செய்திருக்கின்றோம். ஏனென்றால் அவ‌ர்க‌ளிட‌மும் கீற‌, எழுத‌ ப‌ழ‌கியிருக்கிறோம். அத‌னால் எந்த‌வொரு ஆசிரிய‌ராக‌ இருந்தாலும் நாங்க‌ள் அவ‌ர்க‌ளை இழிவுப்ப‌டுத்தி பேச‌க் கூடாது. நல்ல விஷயங்களுக்கு நாங்கள் இடம் கொடுக்க வேண்டும். யாரும் எப்போதும் பொய்யே சொல்லக் கூடாது. பொய் பெரிய பாவமான வேலை. பொய்யால் குடும்பமே கெட்டு போய்விடும். உண்மையே பேச வேண்டும் அதுதான் முக்கியம். பொய்யினால் எல்லா கெடுதிகளும் உண்டாகும். மற்றவர்களை கெடுப்பதற்கும், நாங்கள் கெட்டு போவதற்கும் பொய் ஒரு ஆயுதம். பொய் சொல்பவர்கள் அடுத்த நிமிடமே அகப்பட்டுக் கொள்வார்கள். முகத்தை பார்த்தாலே பொய் சொல்லிவிட்டார் என்பது விளங்கும்.ஞானம் பற்றிய அறிவுஞான விஷயங்களை நன்றாக எல்லோரும் நுணுக்கமாக விளங்கி கொள்ளுங்கள். தேவையான கேள்விகள், ஞானத்தில் சம்பந்தப்பட்டவைகள், புத்தகத்தை வாசித்துவிட்டு underline பண்ணி, அதில் கேள்விகள் கேட்க வேண்டும். ஞான விஷயத்தை பேசுவதற்கு, கேட்பதற்கு எல்லாம் வெட்கப்படக்கூடாது. ஒரு மாணவர் வகுப்பில் இருக்கின்ற நேரத்தில் கேள்விகள் கேட்டால்தான் கெட்டிக்காரராக ஆக முடியும். அப்போதுதான் அவருடைய சந்தேகமெல்லாம் போய்விடும். அடுத்தவர் கேட்பார் என்றிருந்தால் கேள்வி வராது. ஞானத்தை விளங்காது போனால் வேறு எதுவிலும் புண்ணியமில்லை. ஞானத்தை விளங்கினவர்களுக்கு எல்லா நன்மைகளும் உண்டு. பல படிப்புகள் இருக்கின்றது. எல்லாவற்றிலுமே சில சில விளக்கங்கள் உண்டாகி கொண்டேயிருக்கும். அது அல்லாஹ்வுடைய ஞானம். அல்லாஹ்வுக்குரியது மஹ்ரிஃபா. அது அவனுடைய ஒளிவு. அதை சரியான முறையில் கற்றுக்கொண்டோம் என்றால் அந்த ஒளிவு வந்துக் கொண்டேயிருக்கும்.ஞானம் தெரிந்த எங்கள் பிள்ளையையும், பொதுவான ஒரு மனிதனையும் வைத்து பேசி பார்த்தால் தெரியும். எங்க பிள்ளைகள் பேசுவதற்கும், அவர்கள் பேசுவதற்கும் எவ்வளவோ வித்தியாசம். நானே பலருடன் பல முறையில் பேசுகின்றேன். ஞானம் தெரியாதவர்கள் வந்தால் அவர்களிடம் ஒருமாதிரி, ஞானம் தெரிந்தவர்கள் வந்தால் அவர்கள் விரும்பி கேட்பார்கள் விஷய விளக்கங்களை. ஒரு பொதுவான அறிவுள்ளவர்கள் வந்தால் அவர்களிடம் ஒருமாதிரி பேசுவோம். இந்தியாவில் தப்லீக்கில் இருந்த ஆள் ஒருவர் வந்து என்னிடம் பேசிக்கொண்டிருந்தார். நான் அவரிடம் பேசியது, என்ன செய்கிறீர்கள்? என கேட்டதற்கு, கடலை வியாபாரம் செய்வதாக சொன்னார். எங்கெல்லாம் எவ்வளவு போடுகிறீர்கள்? தொழில் நல்லபடியா இருக்கின்றதா? என்று அதைத்தான் பேசிக்கொண்டிருந்தேன். வெளியே போய் சொன்னாராம், “வாப்பா பேசினார்கள் ஆனால் ஒரு ஞானமும் பேசவில்லை” என்று. அவரோடு நான் என்ன பேசுவது? கடலைக்கும், ஞானத்திற்கும் என்ன சம்பந்தம்? கடலை தொழில் செய்பவரோடு, நான் கடலையை பற்றித்தான் பேச வேண்டும். ஞானம் பேச வந்தவர்கள் என்றால் ஞானம் பேச இயலும். எங்க பிள்ளைகள் வந்தால் ஞானத்தைப் பற்றி பேசுவோம். ஏதாவது ஒரு தமாஷா பண்ணி தமாஷாவிலாவது ஒரு ஞானத்தை போட்டுக் கொண்டு இருப்போம். கடலை வியபாரி வந்தால், கடலையைப் பற்றித்தான் பேச வேண்டும். மீன் வியபாரி வந்தால், மீனை பற்றித்தான் பேச வேண்டும்.அல்லாஹ்வே சொல்கிறான் அல்லாஹ் பரிசுத்தமானவன், சுப்ஹானல்லாஹ் என்று. அல்லாஹ் எப்படி பரிசுத்தமானான்? எல்லாமே அதுதானே குப்பையும் அதில் சேர்ந்ததுதானே? அது சுத்தமானதா? குப்பை சுத்தமானதல்ல. இதனின் தாத்பரியம் என்னவென்றால் எல்லாம் ஒன்று சேர்கின்ற‌ நேரத்தில் அது சுத்தமாகின்றது. பரிபூரணமாய் எல்லாமே ஒன்று சேர்கின்ற நேரத்தில் அது பரிசுத்தமாகின்றது. மெட்ராஸுக்கு போனால் முக்கியமான ஒரு விஷயம் கூவம். இந்த கூவத்தை போன்று இன்னும் எத்தனையோ கூவங்கள் ஓடத்தான் செய்யும். இவையெல்லாம் ஓடி கடலில் போய் கலக்கின்றது. அசுத்தங்கள் எல்லாம் கலக்கின்றது கடலில். பரிபூரணத்தில் நிறைய உள்ள தண்ணீரில் போய் அசுத்தங்கள் கலந்து, ரோல் (roll) ஆகின்றது. ஆனால் எங்களுக்கு கடல் தண்ணீர் என்றால் மொத்தமான தண்ணீர். அதில் நாம் ஒலு எடுக்கின்றோம். ஆக அசுத்தம், சுத்தம் என்பது அல்லாஹ்விடம் இல்லை ஆனால் ஷரியத்தில் உண்டு. ஷரியத்தில் அசுத்தம் என்றால் மனிதனை கெடுத்துவிடும் சுத்தம் என்றால் மனிதனை நல்லதாக்கும். அசுத்தம் என்றால் ஒருவன் குடிக்கின்றான் அவனுக்கு ஆபத்து உண்டாகும், ஈரல் கெட்டுவிடும், அவனுடைய பேச்சுக்கள் எல்லாமே மாறி போய்விடும். இவையெல்லாம் ஷரியத்தில் ஹராம் ஆக்கப்பட்டது. அதை செய்தால் அவனுக்கு ஆபத்து ஆகையால் அதை செய்யக் கூடாது. தவ்ஹீதில் கூடும் என நினத்துவிட்டு குடித்து விடாதீர்கள். ஷரியத்தில் இருக்கின்றவர்க்குத்தான் தவ்ஹீதும் இருக்கின்றது.இது ஞான தத்வார்த்த கதைகளில்தான் முக்கியமான விஷயங்களில்தான் நாங்கள் இப்படி பேசுகின்றோம். ஆகவே ஹராம் எப்பவுமே ஹராம்தான். அதை தரீகத்திற்கோ, ஹக்கீகத்திற்கோ ஹலால் ஆக்க இயலாது, ஹலால் அல்ல. மனிதனுக்கு ஷரியத்துதான் அடிப்படை. மனிதனுக்கு முக்கியமானது ஷரீயத். ஷரீயத் படியில் ஏறிக்கொண்டுத்தான் நாங்கள் அடுத்த படியில் ஏற வேண்டும்.தொழுகை பற்றிய அறிவுகொஞ்சம் பேர் சொல்கின்றார்கள் ஞானத்தில் தொழ தேவையில்லை. ஞானத்தில் அலிஃப், பே‍ யை பார்த்து விட்டு தொழ தேவையில்லை என்கின்றனர். அவன் பார்த்தானா? தொழுகையினுடைய origianal (அசல்) எங்கிருந்து வந்தது என்று? யார் சொன்னது தொழ சொல்லி? அல்லாஹ் சொன்னான். அல்லாஹ் சொன்னதை ரசூல்(ஸல்) அவர்கள் தொழ சொன்னார்கள். அல்லாஹ்வும், ரசூலும்(ஸல்) சொல்லியிருக்கும்பொழுது எங்களால் தொழாமல் இருக்க முடியுமா? ரசூல்(ஸல்) அவர்களே தொழுதிருக்கிறார்கள். காட்டி தந்திருக்கிறார்கள். அதற்கு பிறகு எப்படி சொல்வது ஞானத்தில் தொழுகை இல்லையென்று? ஆகவே தொழுகை முக்கியமாக உள்ளது. எந்த ஞானியாக இருந்தாலும் தொழத்தான் வேண்டும். ஆனால் சிலர் இருந்திருக்கிறார்கள் ஃபைசுல்லாஹ் ஹைர்(ரஹ்) (பெயர் சரியாக விளங்கவில்லை) அவர்களுடைய தம்பி மஹானந்த பாபா(வலி) போன்று உள்ளவர்கள். அவர்கள் தேவையான நேரம் தொழுது கொள்வார்கள். ஞானிகளுடைய தொழுகையே வேறு அது வித்தியாசமானது. அவர்கள் ஹக்கின் உள்ளேயே புகுந்து இருப்பவர்கள். அவர்கள் செய்தாலும், செய்யாவிட்டாலும் அவர்களைப்பற்றி நாங்கள் பேச வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. ஆனால் அவர்களை பார்த்துவிட்டு நாங்களும் தொழாமல் இருக்கவும் கூடாது. அவர்களின் நிலைமை வேறு எங்களின் நிலைமை வேறு. ஞானத்தில் முக்கியமானது எதை ரசூல்(ஸல்) அவர்கள் செய்தார்களோ, உள்ரங்கமாகவும், வெளிரங்கமாகவும் அத்துனையும் நாங்கள் செய்ய வேண்டும். அதற்கு மாற்றமாக எங்களுக்கு எப்பவுமே போக இயலாது. தொழுகையை விட்டுவிட்டு ஞானியாகவும் முடியாது. மனிதனாக வாழ்வதற்கு ஷரீயத் மிக முக்கியம் என்பது விளங்குகிறது. எந்த விஷயத்திலும் ஷரீயத்தை விடவே கூடாது. ரசூல்(ஸல்) அவர்கள் தொழ வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் ஏன் தொழுதார்கள்? அவர்கள் ஹக்குவுடனே இருப்பவர்கள். தொழுகைதான் அவர்களின் வாழ்க்கையே. தொழுகை அவசியம் என காட்டுவதற்காகத்தான் ரசூல்(ஸல்) அவர்கள் தொழுதார்கள். ஒவ்வொரு வகையில் தொழுகை நடந்துள்ளது. நின்ற நிலையில் தொழுவது, ருக்உவில் தொழுவது, சஜ்தாவில் தொழுவது, இப்படி எத்தனையோ வகையான தொழுகை நடந்துள்ளது. மரம் நின்ற நிலையிலேயே தொழுகிறது. மிருகங்கள் ருக்உவிலேயே தொழுகின்றது. பறவைகள் சஜ்தாவிலேயே தொழுகின்றன. இயற்கையினுடைய எல்லா தொழுகைகளையும் சேர்த்து அல்லாஹ்வும், ரசூலும்(ஸல்) ஹதியாவாக மனிதனுக்கு கொடுத்தார்கள். ரசூல்(ஸல்) அவர்கள் செய்த ஒன்றை தொழ தேவையில்லை என்று சொன்னால் ஒருகாலும் முஸ்லீமாக இயலாது. ஷாஃபி மத்ஹப்படி மூன்று தொழுகைகளை தொழ தேவையில்லை என்று விட்டுவிட்டார் என்றால் அவர் காஃபிர். அவரை கஃபுன் இடக்கூடாது, நீராட்ட கூடாது, முஸ்லிம்கள் அடக்கக் கூடிய இடத்தில் அந்த மய்யித்தை அடக்க கூடாது. இப்படியெல்லாம் ஷரீயத்துடைய சட்டம் உள்ளது ஆக கட்டாயம் தொழ வேண்டும். ஆஹிராவில் தொழுதவர்களை பார்க்கும் நேரத்தில் இரண்டு கையும், காலும், முகமும் வெண்மையாக இருக்குமாம். ரசூல்(ஸல்) அவர்கள் சொல்கிறார்கள் அருகில் ஓடும் நீரோடையில் ஐந்து நேரமும் குளிப்பதற்கு சமம் இந்த ஒழு எடுப்பது. தொழுகையை கொண்டுதான் மனிதனுடைய மனம் கட்டுப்படுத்தப்படுகிறது. கஷ்டமான நேரங்களில் ரசூல்(ஸல்) அவர்கள் சென்று சுன்னத் தொழுவார்களாம். அதற்குரிய தொழுகைதான் அது. தொழுகை வேண்டாம் என சொல்வது பெரிய பாவம். ஷரீயத்துடைய ஒழுங்கு பிரகாரம் நாம் நடந்துக் கொள்ள வேண்டும்.குத்பு நாயகம் தொழுதிருக்கிறார்கள். ஷாதுலி நாயகம், பெரும் பெரும் இமாம்கள், ஞானிகள் எல்லாம் தொழுதிருக்கிறார்கள். இப்னு அரபி (ரலி) என்று சொன்னால் வெள்ளையர்களுக்கு கூட பெரிய பேர் அவர்களைப் பற்றி. அவர்களே தொழுதிருக்கிறார்கள். ஆக தொழுகையை எங்களை போன்ற சிறியவர்கள் விட்டுவிடக் கூடாது. ஷரீயத்தை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் எங்களுடைய மதத்துக்கு நன்மை இருக்கும். ஷரீயத்தோடு ஹக்கீக்கத்தை நாங்கள் பேணி நடக்க வேண்டும்.அல்லாஹ் எல்லோருக்கும் நல்ல வாழ்வை தந்து, சீரையும், சிறப்பையும், மேன்மையும் தந்து, நீண்ட ஆயுளையும் தந்து, நல்ல வணக்கங்களையும் தந்து, அந்த வணக்கத்தினுடைய நன்மைகளையும் உங்களுக்கு கொடுத்து, கொடிய நோய்கள், ஆபத்துகளிலிருந்து நீங்கள் பாதுகாக்கப்பட்டு, நல்ல வாழ்வினை அல்லாஹ் உங்களுக்கு தரட்டும்.ஸலவாத்துடன் மஜ்லிஸ் இனிதே நிறைவுற்றது.