கருவை நோக்கி....

குருவி ஒன்று மரத்தின் கிளையில்
குறிதான் குருவி இலைகிளை அல்ல
நோக்கி நிற்பவன் மற்றவை நோக்கா
குருவியை நோக்கின் அது அவன் கையில்

வெற்றியின் இரகசியம் அதுவே யாயினும்
வாழ்வின் குறியை அடைவதில் தோல்வி
கிளைகளும் இலையும் குருவியைச் சுற்றி
அடைவதில் தடையாய் இருப்பதைப் போலும்

வாழ்வின் குறியை அடைவதில் தடையாய்
உலகியல் செயலும் மதியினை மருட்டும்
நோக்கம் மறந்து புரியும் செயலும்
விழலுக் கிரைத்த நீராய்ப் போகும்

எதுவோ நோக்கம் அதையே நாடி
வழி தனில் நடக்க நீயும்நாடு
சற்குரு நாதரை துணையாய்ச் சேரு
அவர்துணை கொண்டு கருவை நோக்கு

கருவை நோக்கும் வழியில் பெரிதாய்
தடைகளும் வந்தே நிறைந்தே சூழும்
அறிவைப் புரட்டும் மதியை மருட்டும்
சிந்தை கலங்கிட நிதமே நிற்கும்

குரு வழிகாட்டல் குருவழிப் பற்றல்
குருவில் சரணம் உனக்கு பலமாய்
திசையில் கருவை சரியாய்க் காட்டும்
குறியை திடமாய் அடைந்திட வைக்கும்

வாழ்வில் ஜெயம்பெற நலமேநாடி
மனிதா நீயும் குருவை நாடு
நற்குரு தேடல் நலமே பயக்கும்
அவர்வழிச் செல்வது அதனின் நலமே
அதனினும் நலமாம் அவரினில் சரணம்.

--- M.A.சிராஜுதீன்
துபைi.