உலக நட(டி)ப்பு

பிறப்பதும், வளர்வதும், உண்பதும், உறங்குவதும், சம்பாரித்தலும், திருமணம் செய்வதும், குழந்தைகள் பெறுவதும், முதியவராவதும், இறப்பதும் மனித வாழ்வில் நடக்கும் அன்றாட வாழ்க்கை நடைமுறைகள்.

ஆனால் ஏன் பிறந்தேன், பிறக்குமுன் எங்கிருந்தேன், நாம் வருவதற்கு முன்பே அனைத்து உலக வசதிகளும் தந்தது யார்? ஏன் வாழ்வில் கஸ்ட நஷ்டங்கள் சுக துக்கங்கள் இறப்பு ஏன் என்று சிந்தித்தலே வாழ்வின் இரகசியமும் அவசியமும் அறிவுடமையும் ஆகும். இதை அறிந்தால் வாழ்வில் துன்பங்கள் என்று ஒன்று இல்லை என்று அறிந்து வாழ்வை அர்த்தத்துடன் கூடிய வாழ்வாக ஆக்கிக் கொள்ளமுடியும்.

இயற்கையாய் இறைவன் தானே தனக்குள் நடத்தும் இந்த பிரபஞ்ச விளையாட்டில் நமது பங்கு நமது வேலை என்ன என்பதை தெரிந்துக் கொண்டால் அதை திறம்படச் செய்யமுடியும்.

உலகங்களின் ஆரம்பம் ஒன்றுமில்லை என்பதுபோல் தோன்றினாலும் இப்போதுள்ள பஞ்ச பூதங்கள் உயிரின தாவரங்கள் மனிதன் எல்லாம் அந்த ஒன்றிலிருந்துதான் வந்துள்ளது என்பது மறுக்க மறக்க முடியாத உண்மை. ஆதலால் இறைவன் இல்லை என்று கூறுவது மிகத்தவறான வாதமாகும் உலகத்திலுள்ள அனைத்தையும் அனுபவித்துக் கொண்டு அதன் மூலகாரணியாகிய இறைவனை மறுப்பது குழந்தை தன் தாயை மறுப்பது போலாகும்.

திரைக்கதை ஆசிரியரின் அறிவில் தோன்றும் திரைக் கதைக்கு அவ்வபோது தேவையான கதாபாத்திரங்களையும் சூழ்நிலையையும் உண்டாக்குவது போல் ஒன்றான இறைவனே தன்னிலிருந்து தேவைக்கு ஏற்ப அதுவாகவே மாறுகிறான் என்பதுதான் சரியாகும். இதிலே ஏழை பணக்காரன் உயர்ந்தவன் தாழ்ந்தவன் கற்றவர் கல்லாதவர் வெற்றி பெற்றவர் பெறாதவர் உண்டு என்றாலும் எல்லாமே இறைவனின் வெளிப்பாடுகள் தான்.

இதில் அவரவர் அவர்களின் பங்கை சிறப்பாக செய்தால்தான் அந்த திரைப்படம் இரசிக்க தக்கதாக இருக்கும்.நடித்தவர்களுக்கும் நல்ல பெயர் கிடைக்கும்.ஆனால் எந்த ஒரு நடிகரும் நடிக்கும் அந்த கதாப்பாத்திரங்கள் உண்மையல்ல என்று உணர்ந்தாலும் அதில் ஒன்றித்து தன் முழுத் திறமையையும் காண்பிப்பார்கள் எனவே அவர்களின் கடும் உழைப்பைக் கொண்டு பொய்வேடத்திற்கு புகழ்மாலை கிடைக்கும்.

ஏந்த அளவுக்கு அந்த வேடம் சிறப்பாக செயல்பட்டுள்ளதோ அத்தனை காலம் அதன் தாக்கம் இவ்வுலகில் இருக்கும்.எனவே நம் உண்மை இந்த தோற்றம் இந்த வாழ்வு இல்லை என்றாலும் அதில் ஈடுபாட்டுடன் செய்தலே வாழ்வின் பெருமையாகும்.

ஆனால் நம்மில் பலர் இதுவேடம் என்பதை மறந்து இதுவே நிரந்தரமானது என மனதில் ஆக்கிக் கொண்டு வேடம் கலையும்போது அல்லல் படுகிறார்கள். அதுமட்டுமல்ல நடிப்பில் ஏற்படும் கதைக்கேற்ற கஷ்ட நஷ்ட சுக துக்கங்களை தனதாக்கிக் கொள்கின்றனர்.இது நடிப்பில் அறிவீனம் என்பது எல்வோரும் அறிவர். ஆனால் தனது சொந்த வாழ்வில் இதை சிந்தித்து ஏற்று நடக்க மறுக்கின்றனர்.

நாம் நமக்குள்ள அறிவு, ஆற்றல், திறமை, தகுதிக்கு ஏற்ப வாழ்வை அமைத்து அதில் திறம்பட வாழ்ந்து வேடம் களையும் போது நம் உண்மை நிலைக்கு செல்வதே உண்மையாகும்.இதை அறிந்து வாழும்போது வாழ்வும் சிறக்கும்.
கஷ்டங்களை, நஷ்டங்களை, விருப்பு, வெறுப்புகளை நம்மை வந்து சேராது காத்துக் கொள்ளவும் முடியும்.

இதைத்தான் நபிமார்கள், ரசூல்மார்கள், எல்லாம் வாழ்ந்துக் காட்டி நமக்கும் அதை போதித்துள்ளார்கள்.இதை அப்படியே இன்றும் குத்துபமார்களும், வலிமார்களும், மகான்களும் பின்பற்றி வாழ்ந்தும் வாழ்ந்துக் காட்டி போதிக்கவும் செய்கிறார்கள்.இதை உண்மைதான் என்று அறிந்தவர்கள் இவர்களுடன் சேர்ந்து வாழ்வை வளமாக்கி தமது முடிவை அழகாக்கி என்றும் நிரந்தரமாக இருக்கும் இறைவனுடன் இணைந்துதான் இருந்தோம், இருக்கிறோம், இருப்போம் என்று அறிஞர்களாக வாழ்கின்றனர்.

நபிமார்களும், ரசூல்மார்களும் மக்கள் எல்லோரும் இந்த உலக நாடக மேடையில் மனதை பறிக் கொடுத்துவிடாமல் நடிப்பு வாழ்வின் இலக்கணத்தை தமது போதனைகள் மூலம் மதமாக, மார்க்கமாக ஆக்கி தந்துள்ளார்கள்.இந்த உண்மையில் உறுதியாக இருந்து வாழ்ந்து காட்டிய வாழ்வே பின்பு மதமாக, மார்க்கமாக ஆகியது என்றால் வியப்பில்லை.

இந்த உண்மையை விளக்குவதற்காக இறைவன் புறத்தில் இருந்து வந்து தங்கள் வாழ்வை மக்களுக்கு அர்பணித்து வாழ்ந்த வாழும் மனித புனிதர்களின் சேவைக்கு இந்த உலகில் ஏதும் ஈடாக முடியாது.அவர்களிடம் இருப்பதெல்லாம் அனைவரும் ஓர் உண்மையே அதனால் ஏற்படும் மனிதநேயமே அன்றி வேறில்லை இவர்களை தூற்றுபவர்கள் தங்கள் வாழ்வில் ஏமாளிகளாக வாழ்ந்து வாழ்வில் பல இன்னல்களை தனதாக்கி கொண்டு உடல் இழக்கும் நேரத்திலே சொல்லொன்னா துயரங்களை உணர்வர்.

ஓர் ஊரிலிருந்து மற்ற ஊர்களுக்கு செல்ல பல வழிகள் இருக்கலாம் எதில் சென்றாலும் சேர்ந்துவிடலாம் அதில் இலகுவானது உண்டு, சுருக்கமானது உண்டு, வசதியானது உண்டு இதில் அவரவர் தங்கள் பிறப்பின் மூலம் அறிந்த மார்க்க வழியை பின்பற்றி அதிலுள்ள உண்மை எதைக் கூறுகிறது என்று வாழ்ந்தால் மனிதர்கள் அனைவரும் ஒரே குறிக்கோளை உடையவர்களாக வாழ்வோம் என்பதில் ஐயமில்லை இப்படி வாழும்போது நமக்குள் ஏது பிரிவு பிளவு என்பது விளங்கி ஒற்றுமையுடன் வாழ்வோம்.எது பெரிது எது சிறிது என்ற வாதங்கள் இல்லாமல் உண்மை வாழ்வை வாழ்தலே மனித வாழ்வின் இரகசியம் ஆகும்.

A.N.M.முஹம்மது யூசுப் ஹக்கியுல் காதிரி
துபாய்