மக்காவில் அடிமை மதீனாவில் காதலர்

இதயமே!
எம்பெருமானை நேசி!
அவர்களைப்பற்றியே
எப்போதும் யோசி!

அண்ணலை நேசிக்காத நெஞ்சம்
துடிப்பதை விட வெடிப்பதேமேல்!
அவர்களின் நேசம் நிரம்பாத ஈமான்
கஃபா இல்லாத மக்கா போன்றது!
ஆயத்துகள் இல்லாத குர்ஆன் போன்றது!
ஸஜ்தா இல்லாத தொழுகை போன்றது
இரசூலை நேசிக்காமல்
இறைவனுக்கு மட்டும் ஸஜ்தா செய்து
கொண்டிருந்தால்
போதும் என நினைக்காதே!
சற்றுயோசித்தால்- நீ யாருக்கு
ஸஜ்தா செய்து கொண்டிருக்கின்றாய்
என்பது புரியும்!

ஆமீன் சொல்வதால் மட்டும்
மூமினாக முடியுமா?-நீ
உன்னை-மனைவி-தாய்-எனும்
பெண்ணை
குழந்தை-தந்தை எனும் கண்ணை
அனைத்தையும் விட அவர்களை
நேசித்தால்தான்
மூமின் எனும் ஹக்மார்க் முத்திரை
கிடைக்கும்!

தஸ்பீஹ்சொல்வதில் மட்டும்
இன்பம் காண்கிறாயே!- இறைவன்
ஸலவாத்து கூறிக்கொண்டிருப்பதை
மறந்து போனாயா?

இறைவனின் சந்நிதானத்திற்கு
நீ மட்டும்- நாயகமில்லாமல்
சென்றுவிடலாம் எனும் தலைக்கனமா?

சிலருக்கு
மக்கா சென்று விட்டு மதீனா செல்லாமல்
திரும்பிவர யோசனை!
வரலாற்றில்-மதினாவில்
அபீஅய்யுப் அன்சாரி(ரலி)அவர்களின்
வீட்டையும்
மஸ்ஜிதுன் னபவீயின் இடத்தையும்
ஒர் ஒட்டகை தானாகக் கண்டு நின்றதே!
உனக்கு
ஒட்டகையின் உணர்வும் ஒட்டிப்போனதோ!

மூமின்களே-நீங்கள்
மக்காவில் அடிமையாக நிற்கின்றீர்கள்
மதீனாவில்-நாயகக்
காதலர்களாக பதவி உயர்வு
பெறுகின்றீர்கள்.
இறைவன்
நாயகத்தைக் காதலிக்கும்
அடிமைகளையே
விரும்புகின்றான்!

- ஆலிம் புலவர்
நன்றி-மறைஞானப் பேழை