This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Showing posts with label நாகூர் வரலாறு. Show all posts
Showing posts with label நாகூர் வரலாறு. Show all posts

நாகூர் - ஒரு வரலாற்றுப் பார்வை


நாகூர் என்றதும் நம் சிந்தைக்கு இனிமையுடன் நினைவுக்கு வருவது நாகூர் ஆண்டவர் என்றழைக்கப்படும் இறைநேசச் செல்வர் ஹஜ்ரத் செய்யிது காதிர் ஷாஹ¥ல் ஹமீது மீரான் சாஹிபு அவர்களின் தர்கா ஒன்றுதான். ஆனால் தமிழக முஸ்லிம்களின் கடல் வாணிப வரலாற்றிலும், இஸ்லாம் வளர்த்த இன்பத்தமிழ் இலக்கிய வரலாற்றிலும் கூட நாகூர் சிறப்பான இடம் வகிக்கிறது. இவை குறித்த சில வரலாற்றுச் செய்திகளை இங்கு காண்போம்.

நாகூர், நாகப்பட்டினத்தின் ஒரு அங்கமாகவே இருந்து வந்துள்ளது. கி.பி. 16ஆம் நூற்றாண்டில் ஷாஹ¤ல் ஹமீது வலி அவர்கள் நாகூருக்கு வந்த பிறகு நாகூரின் வரலாறு ஒளி பெறுகிறது. போர்த்துக்கீசியர்களின் பதிவேடுகள் நாகூரை ‘நாகூரு’ என்றும் நாகப்பட்டினத்தின் முஸ்லீம்களின் குடியிருப்புப் பகுதி என்றும் குறிக்கின்றன. போர்த்துக்கீசியர்கள் நாகப்பட்டினத்தை 16ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில் பிடித்துக் கொண்டதும் நாகூர் முஸ்லீம்களின் வணிக வரலாறும் தெரிய வருகிறது.

நாகூர் ஷாஹ¥ல் ஹமீது வலி அவர்கள் கி.பி. 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்கள் ஆவார்கள். இவர்களது காலம் கி.பி 1532-1600 என அறிஞர்கள் கருதுகின்றனர்

(1). ஹிஜ்ரி 978ஆம் ஆண்டு (கி.பி. 1558) இவ்வுலக வாழ்வை நீத்தார்கள் எனவும் இவர்களது நினைவாக முதல் கந்தூரி 1559-ல் நடைபெற்றதாகவும் தர்காவின் வரலாறு கூறும் எழுத்தாளர் ஒருவர் கூறுகிறார்.

(2). ஆற்காட்டை ஆண்ட நவாபுகள் இவர்களது பெயரால் தஞ்சாவூர் நகரை காதர் நகர் என பெயரிட்டனர்.

(3). நாகூர் பகுதியில் அமைதி வழியில் தனது அன்பு அழைப்பால் எண்ணற்ற மக்களை இஸ்லாத்தின் பக்கம் கொண்டுவந்த பெருமை நாகூர் ஆண்டகை அவர்களைச் சாரும். இவர்களது அருட்கொடையைத் தொடர்ந்து பெறும் பொருட்டு தமிழகத்தின் பிற பகுதியிலிருந்தும் முஸ்லிம் மக்கள் இங்கு வந்து குடியமர்ந்தனர். இஸ்லாமியர் பெருகினர். இப்பகுதியில் இஸ்லாம் செழித்தோங்கியது.

ஷாஹ¥ல் ஹமீது வலியுல்லா அவர்கள் நாகூருக்கு வருவதற்கு முன்பே அரேபிய நாட்டிலிருந்து செய்யிது முபாரக் வலியுல்லா அவர்களும், முகமது சித்திக் இப்னு மசூத் அவர்களும் நாகூரில் தங்கி இஸ்லாமிய மார்க்கப் பணியில் ஈடுபட்டிருந்தார்கள். இவர்களது கல்லறைகளும் நாகூரில் உள்ளன.

(4). 16ஆம் நூற்றாண்டில் நாகூர் பற்றிய வெளிநாட்டார் குறிப்புகளிலும், இலக்கியங்களிலும் பயணக் குறிப்புகளிலும் ஷாஹ¥ல் வலியுல்லா அவர்களைப் பற்றியோ அல்லது தர்கா பற்றியோ குறிப்புகள் ஏதும் இல்லை. இதே காலகட்டத்தில் (1545) நாகப்பட்டினம் பகுதிக்கு வருகைதந்து ஏராளமான பரதவர்களை கிருத்துவ மதத்திற்கு மாற்றம் செய்து கொண்டிருந்த புனித ப்ரான்சிஸ் சேவியர் அவர்களின் குறிப்புகளிலும் நாகூர் ஆண்டவர் பற்றிய குறிப்புகள் இல்லை.

(5). நாகூர் ஆண்டவர் தஞ்சாவூர் நாயக்க மன்னர் அச்சுதப்ப நாயக்கரின் (1560-1614) நோயினைத் தீர்த்து வைத்ததாகவும் அவர்களது அருளினால் மன்னனுக்கு ஒரு ஆண் மகவு பிறந்ததாகவும் ‘கஞ்சுல் கராமத்து’ கூறுகிறது. நாகூர் தர்காவிற்கும் தஞ்சாவூர் நாயக்க மன்னர்களுக்கும் இக்காலம் முதல் தொடர்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இக்காலத்தில் நாயக்க மன்னர்களைப் பற்றி எழுதப்பட்ட ரகுநாதபியுதாயமு, சாகித்ய ரத்னகாரா, சங்கீதசுதா ஆகிய தெலுங்கு இலக்கியங்களில் நாகூர் ஆண்டவர் பற்றிய குறிப்புகள் ஏதும் இல்லை. ஆனால் நாயக்க மன்னர்கள் அப்போது நாகப்பட்டினத்தை ஆக்ரமித்துக்கொண்டிருந்த போர்த்துக்கீசியருடன் பகைமை கொண்டிருந்த காரணத்தினாலும் நாயக்க மன்னர்கள் முஸ்லீம் மக்களுக்கு ஆதரவாக இருந்தனர் என்பதாலும் நாகூர் ஆண்டவர் போன்ற வலிமார்கள் மிகப் பெரிய மருத்துவ மேதைகளாகவும் திகழ்ந்தார்கள் என்பதாலும் இத்தகைய வழக்குகள் ஏற்பட்டிருக்கக்கூடும் என்று நம்பலாம்.

(6). இக்காலத்தில் நாகூர் ஆண்டகையின் செயற்பாடுகள் தொடக்க நிலையில் இருந்ததாகக் கொள்ளலாம். இறைநேசச் செல்வர்களான புனித அடியார்களைப் பற்றிய வரலாறுகளும், அவர்களது அற்புத ஆற்றல்களை சிறப்பித்து கூறும் செய்திகளும் ஏராளம் உண்டு. தொன்றுதொட்டு வழங்கிவரும் கதைகளை அப்படியே எழுதிவிடுவது என்பது வழக்கமாக உள்ளது. அவற்றை வரலாற்று நிகழ்வுகளுடன் தொடர்பு படுத்தி தெளிவுபடுத்த முஸ்லீம் எழுத்தாளர்கள் போதிய முயற்சிகளை இதுவரை மேற்கொள்ளவில்லை என்றே சொல்லவேண்டும். நமது வரலாறு பிறரால் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதற்கு இதுவும் ஒரு காரணமாகும். நாகூர் ஆண்டவர் குறித்து நிறைய படைப்புகள் வெளிவந்துள்ளன. ஆனால் இவர்கள் பற்றிய வரலாற்றுச் சான்றிதழ்கள் வலுவிழந்து நிற்கின்றன. உதாரணமாக நாகூர் நாயகர், கடலில் வந்த கப்பலில் உடைப்பு ஏற்பட்டு தத்தளித்துக் கொண்டிருப்பதை உணர்ந்து தமது கண்ணாடியை கடல் நோக்கி எறிந்ததாகவும் அக்கண்ணாடி கப்பலில் ஏற்பட்ட உடைப்பை அடைத்ததாகவும் சொல்லப்படுகிறது. இப்படி ஆபத்திலிருந்து தப்பிய கப்பல் ஹாலந்து நாட்டைச்சேர்ந்த டச்சுக்காரர்களின் கப்பல் என்றும், இதற்கு நன்றிக்கடனாக டச்சுக்காரர்கள் நாகூர் நாயக்கருக்கு நன்றி செலுத்தியதாகவும், ஒரு ஆசிரியர் குறிப்பிடுகின்றார்.

(7). நாகூர் ஆண்டவர் அவர்கள் காலத்தில் டச்சுக்காரர்கள் கிழக்குக் கடற்கரைக்குப் பகுதிக்கு வரவே இல்லை. அப்போது நாகப்பட்டினம் பகுதியில் இருந்தவர்கள் போர்த்துக்கீசியர் ஆவார்கள். டச்சுக்காரர்கள் முதன்முதலில் 1605ம் ஆண்டிலேயே கிழக்குக் கடற்கரைப் பகுதிக்கு வருகின்றனர்.

(8). 1658-ம் ஆண்டில்தான் நாகப்பட்டினம் துறைமுகம் டச்சுக்காரர்கள் வசமாகிறது.

(9). தஞ்சாவூரை ஆண்டுவந்த மராத்திய மன்னர்கள் நாகூர் தர்காவை விரிவுபடுத்துவதற்கு பல்லாற்றானும் உதவிகள் செய்துள்ளனர். கி.பி. 18-ம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை நாகூர் தர்கா சிறிய கட்டிடங்களுடனேயே இருந்து வந்திருக்கவேண்டும் எனக் கருதலாம். மராட்டிய மன்னர் பிரதாப்சிங் (1739-1763) நாகூர் தர்கா கட்டிடங்களை விரிவு படுத்திக் கட்டினார். இம்மன்னர் நாகூர் தர்கா கட்டிடங்களின் Founder என்று சொல்லப்படுகிறது.

(10). மேலும் பிரதாப்சிங் தர்காவின் பராமரிப்பிற்கு பதினைந்து கிராமங்களை மானியமாக அளித்ததாக கல்வெட்டுச் செய்தி ஒன்று கூறுகிறது.

(11). தர்காவில் உள்ள மிக உயரமான (131) அடி மனோராவைக் கட்டியதும் இம்மன்னரே ஆவார். பிரதாப்சிங்கிற்குப் பிறகு வந்த மராட்டிய மன்னர்களும் தர்காவிற்கு பல கொடைகள் வழங்கியுள்ளனர். இக்கொடைகள் குறித்த செய்திகள் தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் மோடிப் பதிவேடுகளில் நிறையக் காணப்படுகின்றன. கந்தூரி உற்சவத்தின்போது ஆண்டுதோறும் மராட்டிய மன்னர்களிடமிருந்து அலங்கார ஆடைகள் வருவது வழக்கமாக இருந்தது.

(12). நாகூர் பகுதி ஆங்கிலேயருடைய ஆட்சிக்குட்பட்டபின்னும் மராட்டிய மன்னர்கள் தர்காவின் நிர்வாக செயல்பாடுகள் குறித்து பெரிதும் அக்கறைகாட்டி வந்தனர். பிரதாப்சிங் கட்டிய மனோராவை ஆங்கிலேயர்கள் தங்களது கொடிக்கம்பமாகப் பயன்படுத்தி வந்தனர். மராட்டிய மன்னர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இப்பழக்கம் நிறுத்தப்பட்டதாக ஆங்கிலேயரின் பதிவுகள் தெரிவிக்கின்றன

(13). மேலும் ஜாதி மத பாகுபாடின்றி இந்துக்களும் முஸ்லீம்களும் தர்காவிற்கு வந்து வழிபடுவதை ஆங்கிலேயர் வெகுவாகப் பாராட்டி எழுதியுள்ளனர்.

(14). இந்து மதத்தைச் சேர்ந்த பக்தர்கள் பலர் தர்காவின் கட்டிடங்களைக் கட்டுவதற்கு நிறைய பொருளுதவி செய்துள்ள செய்திகளை தர்காவில் காணப்படும் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. 18-ம் நூற்றாண்டில் நடைபெற்ற கர்நாடகப் போரின்போது பிரஞ்சு தளபதி லாலி நாகூர் தர்காவை கொள்ளையிட்ட செய்தியும் நமக்கு கிடைக்கிறது.

(15). 19-ம் நூற்றாண்டில் தர்காவின் தரிசனத்திற்கு வரும் கூட்டம் மிகவும் அதிகரித்துக் கொண்டு வந்தது. இதனால் தர்காவின் வருமானமும் பெருகியது. ஆகவே தர்கா நிர்வாகத்தைக் கவனிக்கப் பல குழுக்கள் நியமிக்கப்பட்டன. இந்துக்களும் முஸ்லிம்களும் இணைந்து இந்த தர்காவைப் போற்றி வந்ததால் ஒரு சமயம் முத்துசாமிப்பிள்ளை என்பவர் தர்காவின் மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்டிருந்தார்.

(16). தர்காவிற்கான மானியங்கள் முறைப்படுத்தப்பட்டன. மானிய நிலங்களிலிருந்து வரும் நெல் வருமானத்தை வலியுல்லா அவர்களின் சந்ததியினர் நிர்வகித்து வர வழிவகை செய்யப்பட்டிருந்தது.

(17). 1817-ம் ஆண்டு அறநிலைய சட்டப்படி ஆங்கிலேய அரசே தர்காவின் நிர்வாகத்துக்கு வந்தது. 1934-ம் ஆண்டு முஸ்லீம் அறநிலையங்களுக்கென தனிச்சட்டம் ஏற்படுத்தப்பட்டது.

(18). 1954-ம் ஆண்டு வக்பு சட்டங்கள் ஏற்படுத்தப்பட்டபின் தர்கா நிர்வாகம் இச்சட்டத்தின்படி முறைப்படுத்தப்பட்டது.
நாகூர் தர்காவில் கந்தூரி 14 நாட்கள் நடைபெறுகிறது. அப்போது இந்தியாவில் பல பகுதிகளிலிருந்தும் உலகின் பல பகுதிகளிலிருந்தும் லட்சக்கணக்கான மக்கள் கூடி வலியுல்லா அவர்களின் அருள் வேண்டுகின்றனர்.
9-ம் நாள் பீர் என்னும் பக்கீர் மௌனமாக அமர்ந்திருக்கும் பழக்கம் ஆந்திர மாநிலம் பெணுகொண்டா தர்கா நடைமுறைப் பழக்கங்களிருந்து பெறப்பட்டதாக தெரியவருகிறது.

(19). மேலும் இந்து கலாச்சாரத் தாக்கத்தினால் பல வழிபாட்டு முறைகள் தர்காவில் பின்பட்டு வருவதைக் காண்கிறோம்.

நாகப்பட்டினத்திலும், நாகூரிலும் முஸ்லிம் வணிகர்கள் பலர் வாழ்ந்து வந்தனர். நாகூரில் வாழ்ந்து வந்த முஸ்லிம் வணிகர்கள் பற்றிய செய்திகளும், நாகூர் துறைமுகம் குறித்த செய்திகளும் 16-ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்தே நமக்கு கிடைக்கின்றன. இங்கு வாழ்ந்த முஸ்லிம் வணிகப் பெருமக்கள் கப்பல் உரிமையாளர்களாகவும், கப்பல் செலுத்தும் தொழிலில் ஈடுபட்டவர்களாகவும், கடல் கடந்த நாடுகளுக்குச் சென்று வாணிபம் செய்பவர்களாகவும் இருந்தனர். முஸ்லிம் வணிகர்கள் அனைவருமே கப்பல்கள் வைத்திருக்கவில்லை. ஒருசில வணிகர்களுக்குச் சொந்தமாக இருந்த கப்பல்களில் பிற வணிகர்கள் தங்களது வணிகப் பொருட்களை ஏற்றிச் சென்று வாணிபம் செய்துள்ளனர்.

நாகூர் கடற்கரையில் 16-ம் நூற்றாண்டில் ஐந்து கோயில்கள் இருந்தன. இந்தக் கோயில்கள் கப்பல்களுக்கு கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்தன. இத்துறைமுகத்திற்கு ஒன்றை மரப்பாய் கப்பலிலிருந்து, 300 டன் எடையுள்ள கப்பல் வரை வந்து சென்றன. இங்கு வாழ்ந்த முஸ்லிம் வணிகர்கள் சுமத்தரா, ஜாவா, மலாக்கா, மலேயா, பர்மா, இலங்கை ஆகிய கடல் கடந்த நாடுகளுடன் வணிகத் தொடர்பு வைத்திருந்தனர். முக்கிய ஏற்றுமதிப் பொருள்களாவன : அரிசி, சங்கு , மிளகு மற்றும் துணிவகைகள். இறக்குமதிப் பொருட்களாவன : பாக்கு, யானை, குதிரை, தேங்காய், உலோகங்கள் மற்றும் வாசனை திரவியங்கள்.

(20). நாகூர் துறைமுகத்திலிருந்து மேற்கு கடற்கரைத் துறைமுகங்களுக்கும் கிழக்குக் கடற்கரையோரமாக உள்ள பிற துறைமுகங்களுக்கும் வணிகத் தொடர்பு மிக அதிகமாக இருந்து வந்தது. மேலும் நாகூர் துறைமுகம் வெட்டாறின் கிளையான குடவளாற்றின் முகத்துவாரத்தில் இருந்ததால், ஆற்றில் தண்ணீர் அளவு கணிசமாக இருக்கும்போது, ஆற்றினுள் குறைந்த எடையுள்ள கப்பல்கள் மற்றும் படகுகள் போக்குவரத்து நடந்து வந்தது. இதன்மூலம் உள்நாட்டு விளைபொருட்களை, துறைமுகத்திற்கு ஏற்றிவர ஏதுவாக இருந்தது.

(21). 16-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் போர்த்துக்கீசியர் நாகப்பட்டினம் துறைமுகத்தைப் பிடித்துக் கொண்டனர். இயல்பாக அவர்கள் முஸ்லிம்கள் மீது காட்டிய பகை உணர்வு அங்கு வாழ்ந்த முஸ்லீம் வணிகர்களை நிலைகுலையச் செய்தது. போர்த்துக்கீசிரியன் அனுமதிச்சீட்டுடன் (cartaz) முஸ்லீம் வணிகர்களும் வாணிபத்தில் ஈடுபட அனுமதிக்கப்பட்டனர். ஆனால் முஸ்லீம் வணிகர்கள் அவர்களை விட்டு விலகிச் சென்று நாகூர் துறைமுகத்திலிருந்து தங்களது வாணிப நடவடிக்கைகளை நடத்தி வந்தனர். நம் நாட்டு மன்னர்களிடையே ஏற்பட்ட பிணக்குகளினாலும் ஐரோப்பியர்களின் தலையீட்டினாலும் தமிழகத்தின் அரசியல் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதன் விளைவாக முஸ்லீம் வணிகர்களும் அவர்களது பொருளாதாரமும் பாதிக்கப்பட்டன. பிரஞ்சு தளபதி லாலி நாகூர் தர்காவை கொள்ளையிட்டது மட்டுமின்றி நாகூர் துறைமுகத்திலிருந்த முஸ்லிம் வணிகர்களுக்குச் சொந்தமான இரண்டரை லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்களையும் கொள்ளையிட்டுச் சென்றார் என்பதிலிருந்து முஸ்லிம் வணிகர்களின் செல்வச் சிறப்பையும் அதே சமயத்தில் அவர்களுக்கு ஏற்பட்ட இன்னல்களை யும் அறிய முடிகிறது.

(22). 1773-ல் மராட்டிய மன்னர் நாகூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள ஊர்களை டச்சுக்காரர்களுக்கு விற்றுவிட்டனர். இதை ஆற்காடு நவாப் எதிர்த்து தம் வசப்படுத்திக்கொண்டார்.

(23). பின்னர் 1788-ல் நாகூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 277 கிராமங்களை மராட்டிய மன்னர் இரண்டாம் துளஜா ஆங்கிலேயருக்கு அளித்தார். இதன்பின் நாகூர் துறைமுகம் ஆங்கிலேயரின் வசமானது.

(24). 1780-ல் ஹைதர்அலி நாகப்பட்டினத்தின் மீது படையெடுத்து வந்தார். அப்போது நாகூர் ஆங்கிலேயர் வசமிருந்தது. நாகப்பட்டினத்திலிருந்து டச்சுக்காரர்கள் ஹைதர்அலிக்கு உதவி அளித்தனர். ஹைதரின் படைகள் நாகூர்ப் பகுதியில் பெரும் அழிவை ஏற்படுத்தின. நாகூர் பகுதி மக்களின் உயிருக்கும் உடமைக்கும் பெரும் சேதம் ஏற்பட்டது. நாகூரிலிருந்த வணிகப் பெருமக்களும் பொது மக்களும் பயந்து பல இடங்களுக்கு குடிபெயர்ந்தனர் என்று நாகூரிலிருந்த ஆங்கிலேய பிரதியின் அறிக்கை கூறுகிறது.

(25).தஞ்சாவூர் பகுதி முழுவதும் 1799-ல் ஆங்கிலேயர் வசமானது. நாகப்பட்டினமும் நாகூரும் ஒரே நகராகக் கருதப்பட்டது. நாகூர் மாவட்டத் தலைநகராக இருந்தது.

(26). பின்னர் நாகப்பட்டினம் மாவட்டத் தலைநகரானது.

(27). அரசியல் குழப்பங்களினால் குடிபெயர்ந்து சென்ற வணிகர்களையும், நெசவாளர்களையும் நாகூருக்கு வந்து குடியமர ஆங்கிலேய அரசு பல சலுகைகளை அளித்தது. முஸ்லீம் வணிகர்கள் மீண்டும் நாகூருக்கு வந்து சேர்ந்தனர். நாகூரில் பலவித வரிச்சலுகைகள் அளிக்கப்பட்டன.

(28). வீட்டுவரி தவிர பிற வரிகள் ரத்து செய்யப்பட்டன. வணிகர்களுக்கு பொருளாதார உதவி செய்யும் பொருட்டு ஆங்கிலேயர் ஒரு வங்கியை நாகூரில் ஏற்படுத்தினர்.

(29).நாகூரில் ஒரு வகை ஊதா நிறத் துணி உற்பத்தி செய்யப்பட்டது. Naguri Blue Cloth எனும் இத்துணிக்கு இங்கிலாந்திலும் தூரக்கிழக்கு நாடுகளிலும் நல்ல கிராக்கி இருந்தது.

(30). நாகூரில் ஒரு சாயத் தொழிற்சாலையும் ஏற்படுத்தப்பட்டது. நெசவாளர்களுக்குப் பல சலுகைகள் அளிக்கப்பட்டன. நாகூர் பகுதியில் சுமார் 4000 நெசவாளர்கள், 1100 தறிகளில் இவ்வகை ஊதா துணிகளை உற்பத்தி செய்து ஏற்றுமதிக்கு அளித்து வந்தனர். நெசவாளர்களில் பெரும் பாலோனோர் முஸ்லிம் மக்கள் என்பது குறிப்பிடத் தக்கது. உற்பத்தியாகும் ஊதா துணியில் பெரும் பகுதியை முஸ்லிம் வணிகர்கள் வாங்கி ஜாவா, இங்கிலாந்து, மலாக்கா, இலங்கை ஆகிய நாடுகளுக்கு தங்களது கப்பல்களிலும் ஆங்கிலேய வணிகர்களின் கப்பல்களிலும் அனுப்பினர். ஆங்கிலேய கம்பெனியும், செட்டியார் இன வணிகர்களும் ஆங்கிலேய தனியார் வணிக நிறுவனங்களும் இவ்வகைத் துணி ஏற்றுமதியில் ஈடுபட்டிருந்தனர். இந்து வணிகர்களும், முஸ்லிம் வணிகர்களும் ஒற்றுமையுடன் இருந்து வாணிபம் நடத்தி நாகூரின் வளம் பெருக்கினர்

(31).முஸ்லிம் வணிகர்களான மரைக்காயர்கள் குறித்த செய்திகள், போர்த்துக்கீசியர், டச்சுக்காரர்கள், டேனிஷ்காரர்கள், பிரெஞ்சுக்காரர்கள் மற்றும் ஆங்கிலேயரின் பதிவேடுகளில் நிறைய காணப்படுகின்றன. மரைக்காயர், நகுதா, மாலுமி, செறாங்கு, சுக்காணி போன்ற பட்டங்களுடன் ஏராளமான முஸ்லிம் வணிகர்களின் பெயர்கள் இப்பதிவேடுகளில் காணக்கிடக்கின்றன. இவர்கள் வணிகத் தொடர்பு கொண்டிருந்த நாடுகளிலெல்லாம் பெரும் செல்வாக்குடன் விளங்கினர். சில வணிகர்கள் தங்களுக்குத் தேவையான கப்பல்களை வெளிநாடுகளிலிருந்து வாங்கும் அளவிற்கு வசதி படைத்தவர்களாக இருந்தனர். 1722-ல் ஆங்கிலேயர் அச்சை நாட்டில் ஒரு வணிகச் சாவடி ஏற்படுத்தும் பொருட்டு அந்நாட்டு மன்னரிடம் அனுமதி பெற, முகமது காசிம் மரைக்காயர் மூலமாகவே அணுக வேண்டி வந்தது. இவர் நாகூரைச் சேர்ந்த ஒரு கப்பல் வணிகர்; மேலும் முகமது காசிம் மரைக்காயர் பினாங்கிலும் கெத்தானிலும் அந்நாட்டு மன்னர்களிடமும் பெரும் செல்வாக்கு உடையவராக இருந்தார் என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும்.

(32). இவருக்கு ஆங்கிலேய அரசு பல வரிச் சலுகைகளை அளித்துள்ளது.

(33). இது போன்று தூரக்கிழக்கு நாடுகளில் சிறப்புடன் விளங்கிய நாகூர் வணிகர்கள் பலர் குறித்த செய்திகளும் நமக்குக் கிடைக்கின்றன. இவர்களது வணிகச் சாவடிகள் பினாங்கு, அச்சை, சுமத்தரா, பெரு, கெத்தா, இலங்கை, பர்மா ஆகிய நாடுகளில் வளமுடன் விளங்கியதை ஆங்கிலேயரின் பதிவேடுகள் தெரிவிக்கின்றன.

(34). 1796-ம் ஆண்டு பதிவேடு ஒன்று நாகூரில் சுமார் 70 முஸ்லீம்கள் கப்பல் வணிகர்களாகத் திகழ்ந்தனர் எனத் தெரிவிக்கிறது. இவர்கள் தங்களுக்குத் தேவையான கப்பல்களை நாகூரிலேயே கட்டிக் கொண்டனர். இவ்வாண்டில் ஏழு கப்பல்கள் மட்டும் நாகூர் மற்றும் நாகப்பட்டினத் துறைமுகங் களில் முஸ்லிம் வணிகர்களுக்குச் சொந்தமானவையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள வணிகர்கள் இக்கப்பல்களில் தங்கள் வணிகப் பொருட்களை ஏற்றிச் சென்றிருக்க வேண்டும். இதற்குரிய வாடகை, கமிஷன் போன்றவற்றை கப்பல் உரிமையாளர்கள் பெற்றுக் கொண்டனர். கப்பல் சரக்குக் கட்டணம், பொருட்களின் மதிப்பில் 14% கமிஷன், 7 1/2% இன்ஷ¥ரன்ஸ் திட்டமும் இருந்தது. பிரிமியம் 16% ஆகும். பெரும்பாலும் கப்பல் உரிமையாளர் கப்பலில் செல்வது கிடையாது. கப்பல் தலைவரான நகுதாவின் பொறுப்பில் கப்பல் ஒப்படைக்கப்படும். நகுதாவும் தனது ஊதியத்திற்குப் பதிலாக தனது வணிகப் பொருட்களை கப்பலில் ஏற்றிச் செல்லுவார். நாகூர் வணிகர்களின் வணிக நடைமுறைகள் பழக்கங்கள் குறித்த சுவையான பல செய்திகள் ஐரோப்பியரின் பதிவேடுகளில் நமக்கு கிடைக்கின்றன.

(35). தங்களது கப்பல்களை பதிவு செய்து கொண்டு உரிய சுங்கத் தீர்வைகளை செலுத்திய வணிகர்கள் மட்டுமின்று பதிவு செய்யப்படாத கப்பல்களும் பல இருந்தன. சுங்கத் தீர்வையை ஏய்த்து பொருட்களை ஏற்றிவந்த இதுபோன்ற கப்பல்கள் ஆங்கிலேயரால் பறிமுதல் செய்யப்பட்டன. அபராத மும் விதிக்கப்பட்டது. நாகூர் பக்கிரி மரைக்காயர் 1823-ல் இலங்கையிலிருந்து அனுமதியின்றி பாக்கு ஏற்றிக் கொண்டுவந்தபோது கண்டுபிடிக்கப்படு அவரது கப்பல் பறிமுதல் செய்யப்பட்டது.

(36). கபூல் முகமது மரைக்காயர் தனது கப்பலில் அனுமதின்றி வங்காளத்திற்கு சங்கு ஏற்றிச் சென்றபோது கப்பல் பறிமுதல் செய்யப்பட்டது

(37). நாகூர் துறைமுகக் கப்பல்களில் நகுதா, சிராங்கு, மாலுமி, கிராணி, சுக்காணி போன்ற பணிகளில் ஈடுபட்டிருந்த பல முஸ்லிம்களின் பெயர்கள் ஆங்கிலேயரின் பதிவேடுகளில் நிறைய காணப்படுகின்றன

(38). கி.பி. 19-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நாகூர் மரைக்காயர்கள் தங்களது கப்பல்களை கொழும்பு, அச்சை, பினாங்கு, மலாக்கா, மலேயா ஆகிய நாடுகளுக்கு வணிக நிமித்தம் அனுப்பி வந்தனர். ஐரோப்பாவில் நடைபெற்ற போர்களின் தொடர்பாக இந்தியாவிலும் ஆங்கிலேயருக்கும் பிரஞ்சுக்காரருக்கும் பகை மூண்டது. இப்போர்களில் நடுநிலை வகித்து வந்த டேனிஷ்காரர்களின் கொடி மற்றும் அனுமதிச்சீட்டுடன் நாகூர் மரைக்காயர்கள் தங்கள் கப்பல்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி வந்தனர். ஆனால் டேனிஷ்காரர்கள் நடுநிலையிலிருந்து மாறியபோது, அவர்களது அனுமதிச் சீட்டுடன் சென்ற கப்பல்களை பிரஞ்சு நாட்டு போர்க்கப்பல்கள் வளைத்துப் பிடித்தன. பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்நிலையிலிருந்து தங்களை காப்பாற்றக்கோரி நாகூர் முஸ்லிம் வணிகர் கள் ஆங்கிலேய அரசிடம் விண்ணப்பித்துக் கொள்ளுகின்றனர். இந்த விண்ணப்பத்தில் கையொப்ப மிட்டுள்ள பதினேழு பேர்களுள் பதிமூன்று பேர் முஸ்லிம்கள் ஆவர். அவர்களது பெயர்கள் வருமாறு :- முகமதலி மரைக்காயர், முகமது சையது மரைக்காயர், அலிசாயபு நகுதா, ஹபீப் முகமது மாலுமி, பீர் சாஹிப் நகுதா, முத்துனா சாஹிப், சையது இஸ்மாயில் லப்பை, முகமது ஹபீப் மரைக்காயர், மதார் சாஹெப் நகுதா, சையது முகமது நகுதா, சுலைமான் மாலுமி, பக்கீர் முகமது நகுதா, சித்தி முகமது இப்ராஹிம் நகுதா.

(39).பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து நாகூர் வணிகர்களின் கப்பல்கள் வாணிகப் பொருட்களோடு பயணிகளையும் தூரக்கிழக்கு நாடுகளுக்கு ஏற்றிச் சென்றன. மலாக்கா, மலேஷியா, இலங்கை, பர்மா ஆகிய நாடுகளுக்கு பெருமளவிற்கு முஸ்லிம்கள் சென்றனர். அங்கெல்லாம் ஆங்கிலேய ஆட்சி ஏற்பட்டதின் பயனாக தொழிலாளர்கள் நிறைய தேவைப்பட்டனர். நாகூரிலிருந்தும் இந்நாடுகளுக்குச் சென்றவர்கள் அந்நாடுகளில் தொழிலாளர்களாகவும், வணிகர்களா கவும் ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் ஈடுபட்டும் இருந்தனர். 1786-ல் பினாங்கும் 1824-ல் சிங்கப்பூரும் உருவானபோது நாகூர் மற்றும் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த மரைக்காயர்கள் அங்கெல்லாம் கணிசமான என்ணிக்கையில் இருந்தனர். நாகூரிலிருந்து வெளிநாடுகளுக்குச் சென்ற மரைக்காயர்கள் தங்களது ஆன்மீகத் தேவைகளுக்காக அங்கெல்லாம் நாகூர் ஆண்டவர் பெயரால் தர்காக்கள் கட்டி ஆண்டு தோறும் நாகூரில் நடைபெறுவதுபோல் கந்தூரியும் நடத்தினர். இதுபோன்ற கலாச்சார மையங்கள் (தர்காக்கள்) சிங்கப்பூரிலும், பினாங்கிலும் இன்ரும் உள்ளன.

(40). மேலும் நாகூர் தர்காவில் கந்தூரியின்போது ஏற்றுவதற்காக ‘கொடி’, கப்பல் மூலம் அனுப்பி வந்தனர்.

1848-ல் சுமார் பத்து கப்பல் உரிமையாளர்கள் மட்டும் நாகூரில் இருந்தனர் என்பதற்கு அங்கு பதிவாகியுள்ள கப்பல்களின் பெயர்களைக் கொண்டு அறிகிறோம். இவை அனைத்தும் பாய்மரக் கப்பல்கள். அவையாவன : காதர்மீரா, ஷம்ஷீர், ஜூலிக்ஸ், கூடு காதர் பக்ஸ், பதேகாசிம், சகியா, பால காதர், அகமது பக்ஸ் முகமது மைதீன் பக்ஸ், ஜஹாங்கீர், ஷாஹ¥ல் ஹமீது. இக்கப்பல்கள் சிங்கப்பூர், பினாங்கு, பர்மா, ஆகிய நாடுகளுக்கு பெரும்பாலும் பயணிகளை ஏற்றிச் சென்றன. குறைந்த அளவில் வணிகப் பொருட்களையும் ஏற்றிச் சென்றன

(41). 19-ம் நூற்றாண்டின் இறுதியில் ஒரு சில கப்பல் உரிமையாளர்களையும், கப்பல் வணிகர்களையும் நாகூரில் காண முடிகிறது. இவர்களும் பொருளாதரத்தில் முனைப்பாக இல்லை என்பதும் தெரிய வருகிறது. இக்காலத்தில் செட்டியார் வணிகர்கள் பெரும் பணக்காரர்களாக விளங் கினர். முஸ்லிம் வணிகர்கள் பலர் அவர்களிடம் கடன் பெற்று வணிகம் செய்துள்ளனர். நாகூரில் வசித்த அரசன் குத்தூஸ் மரைக்காயர், லார்டு ஹாரிஸ் என்ற கப்பலுக்கு உரிமையாளர். இவர் 1890-ல் சாமிநாத செட்டியார் என்பவரிடம் ரூ.10,000 கடனாகப் பெற்று, பெற்ற கடனை திருப்பி அளிக்க முடியாமல் கப்பலையே கொடுத்து ஈடு கட்ட வேண்டியதாயிற்று

(42). இவரது சகோதரர் அகமது நைனா மரைக்காயர் ஒரு கப்பல் வணிகர் என்ற செய்தியும் கிடைக்கிறது

(43). மேலும் பல கப்பல் வணிகர்கள் வாழ்ந்திருக்கின்றனர். அவர்களைப் பற்றிய செய்திகளை அறியக்கூடவில்லை. மரைக்காயர் தெரு, செராங்கு தெரு, மாலுமியார் தெரு, நகுதா தெரு, பயலட் தெரு என்பன இங்கு வாழ்ந்த கப்பல் வணிகர்களை நினைவு படுத்துகின்றன.

1867-ம் ஆண்டில் நாகூர் மற்றும் நாகப்பட்டினம் துறைமுகங்கள் ஒன்றிணைக்கப்பட்டன. இருபதாம் நூற்றாண்டில் நாகூர் வணிகர்களும் நாகப்பட்டினத்திலிருந்து தங்களது வாணிபத்தைத் தொடர்ந்தனர். சிறிய பாய்மரக் கப்பல்கள் மூலம் இலங்கை, மேற்குக் கடற்கரை, கல்கத்தா, துறைமுகங்கள், ராமநாதபுரம், திருநெல்வேலி மாவட்டத் துறைமுகங்கள் ஆகியவற்றுடன் சிறிய அளவில் வணிகம் செய்துவந்துள்ள செய்திகள் தெரிய வருகின்றன. ஆனால் பிற நாடுகளுக்குச் சென்ற செய்திகள் கிடைக்கவில்லை. அதிக எடை கொள்ளளவு உள்ள ஆங்கிலேயரின் நீராவிக் கப்பல்களுடன் மரைக் காயர்களின் பாய்மரக் கப்பல்கள் போட்டிபோட முடியவில்லையாதலாலும் ஆங்கிலேலேயரின் பெரும் மூலதனத்துடன் இவர்களது குறைந்த மூலதனம் ஈடுகொடுக்க முடியாததாலும் ஏறத்தாழ 16-ம் நூற் றாண்டிலிருந்து முஸ்லிம் இனம் சார்ந்த அரசுகளில் ஆதரவு இல்லாததாலும், கிழக்குக் கடற்கரை முஸ்லிம்களின் கடல் வாணிப வரலாறு 19-ம் நூற்றாண்டின் இறுதியில் நசிந்து மறைந்து போயிற்று. இதில் நாகூர் வணிகர்களும் அடங்குவர்.

17-18-ம் நூற்றாண்டுகளில் நற்றமிழ் புலவர்கள் பலர் நாகூரில் வாழ்ந்து வந்துள்ளனர். இவர்கள் இலக்கிய உலகிற்கும் தமிழுக்கும் நல்ல சேவை புரிந்துள்ளனர். இக்காலக்கட்டத்தில் ஏறத்தாழ 30-க்கும் மேற்பட்ட புலவர்களின் பெயர்களும் 50-க்கும் மேற்பட்ட படைப்புகளும் நமக்கு தெரிய வருகின்றன. நாகூர் தந்த நல்ல தமிழ் புலவர் வரிசையில் முதலிடம் வகிப்பவர் குலாம் காதிர் நாவலர் ஆவார்கள். திரைகடலோடி தேடிய திரவியத்தை தக்கார்க்கு வேளாண்மை செய்வதில் நாகூர் வணிகர்கள் சிறந்து விளங்கினர். இவர்களது கொடைத் தன்மையினால் பல இஸ்லாமிய இலக்கியங்கள் உருவாகியுள்ளன என்பதை இஸ்லாமிய இலக்கிய வரலாற்று நூல்கள் பெருமையுடன் பேசுகின்றன

(44).நாகூரின் வணிக, ஆன்மீக கலாச்சார வரலாறு குறித்த ஒரு அறிமுகமே இக்கட்டுரை. நாகூர் குறித்து பதிவேடுகள் கூறும் விரிவான செய்திகள் மூலம் தமிழக முஸ்லிம்களின் வரலாற்றை தெளிவுபட தெரிந்துகொள்ள மேலும் பல செய்திகள் நமக்குத் தெரியவருகின்றன.



நன்றி - ஜெ.ராஜா முகமது M.A., B.Sc., (காப்பாட்சியர், அரசு அருங்காட்சியகம், புதுக்கோட்டை - 622 002 )